உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Monday, January 23, 2012

மின்வெட்டு : தமிழகத்தின் 44 ஆண்டுகால தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சிகள் தூக்கி எறியப்படும்?

மின்வெட்டு : தமிழகத்தின் 44 ஆண்டுகால தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சிகள் தூக்கி எறியப்படும்? 
தலைப்பை கண்டு குழம்ப வேண்டாம்... கட்டுரையை படித்து முடித்த பின் உங்களுக்கு புரிந்து விடும்.......

தமிழ் நாட்டின் தொழில் வளர்ச்சிக்கும், விவசாய வளர்ச்சிக்கும், மக்களின் நிம்மதியான வாழ்க்கைக்கும் மிக முக்கியமான தேவையே மின்சாரம் தான். இதை உணர்ந்ததால் தான் காமராஜர் தொலைநோக்கோடு திட்டமிட்டு நெய்வேலி, சென்னை, சமயநல்லூர் அனல் மின் திட்டங்களையும், குந்தா, மோயாறு, பெரியாறு, பரம்பிக்குளம், மேட்டூர் புனல் மின் திட்டங்களையும் நிறைவேற்றி, அக்காலத்திலேயே ஏறத்தாழ அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரத்தை கொண்டு செல்ல முயற்சிகளை செய்தார்.

தமிழ் நாட்டில் உள்ள மின் நிலையங்கள் அப்படி எவ்வளவுதான் உற்பத்தி செய்கிறது?

1951-இல் தமிழகத்தின் மின்தேவை வெறும் 172 மெகாவாட் மின்சாரம் மட்டுமே. ஆனால் இன்று 12000 மெகாவாட் மின்சாரம் தேவைபடுகிறது. தமிழகத்தின் மொத்த மின் உற்பத்தி நிறுவுதிறன் 15,800 மெகாவாட் ஆகும். அவற்றின் மூலம் மின்வாரிய மொத்த மின் உற்பத்தி 7000 மெகாவாட் முதல் 8000 மெகாவாட். மரபு சாரா எரிசக்திகளான காற்றாலை மின் உற்பத்தி, சூரிய ஒளி மின்சக்தி, சர்க்கரை ஆலை மின் சக்தி மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்குவது மூலம் ஏறத்தாழ 2500 மெகாவாட் மின்சாரம் ஈடு செய்யப்படுகிறது. ஆனால் தற்போதைய மின் தேவை 12000 மெகாவாட் மின்சாரம். பற்றாக்குறை மின்சாரம் 1500 முதல் 2000 மெகாவாட்.

தமிழகத்தில் 2009 ஆம் ஆண்டின் கணக்குபடி 18,80,450 பம்ப் செட் இணைப்புகளும், 1,36,61,431 வீட்டு உபயோக இணைப்புகளும் உள்ளன. இவை தவிர தொழிற்சாலை இணைப்புகளும் உள்ளன.

தமிழகத்தின் மின் உற்பத்தியானது 4 அனல் மின் நிலையங்கள், 38 நீர் மின் நிலையங்கள், 4 எரிவாயு மின் நிலையங்கள் மூலமாகவும் மற்றும் மரபு சாரா எரிசக்திகளான காற்றாலை மின் உற்பத்தி, சூரிய ஒளி மற்றும் சர்க்கரை ஆலை மூலம் பெறப்படுகிறது. கல்பாக்கம் அணுமின் நிலையம் மற்றும் நெய்வேலி மின் நிலையத்திலிருந்தும் குறிப்பிட்ட அளவு மின்சாரம் பெறப்படுகிறது.

தமிழகத்தின் மொத்த மின் உற்பத்தியில் வீட்டு உபயோகத்திற்கு 16%, நிறுவனங்கள், கடைகள் 26%, 4% தெருவிளக்குகளுக்கும், தொழிற்சாலைகளுக்கான உயர் அழுத்த மின்சாரம் 42% மற்றும் குறைந்த அழுத்த மின்சாரம் 12% பயன்படுத்தபடுகிறது. மின்கசிவு, மின்திருட்டு மூலமும் மின்சக்தி வீணடிக்கப்படுகிறது. மின்கசிவு , மின் திருட்டால் ஏற்படும் இழப்பு மட்டுமே ஏறத்தாழ ரூ.3,000 கோடியிலிருந்து ரூ.7,000 கோடி வரை என்று கூறப்படுகிறது.

தமிழகத்திலுள்ள நீர் மின் நிலையங்களில் மூலம் 7,835 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். ஆனால் தற்போது கோடை காலம் என்பதால் மின் உற்பத்தி , 2,500 மெகாவாட் மட்டுமே.தமிழ் நாட்டில் உள்ள அனல் நிலையங்கள் மூலம் 3000 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய முடியும். ஆனால் 2000 மெகாவாட் மின்சாரம் மட்டுமே தற்போது உற்பத்தி செய்யப்படுகிறது. அதேபோல் காற்றாலைகள் மூலம் 4000 மெகாவாட் பெறமுடியும். ஆனால் கிடைப்பது 1500 மெகாவாட் மட்டுமே. தனியாரிடமிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் கிட்டதட்ட 1500 முதல் 2000 மெகாவாட் பெறப்படுகிறது.அப்படி இப்படியாக கிட்டதட்ட 10000 மெகாவாட் மின்சாரத்தை தமிழக அரசால் பெறமுடிகிறது.

17 ஆண்டுகளாக ஒரு புதிய மின் உற்பத்தி திட்டமும் செயல்படுத்தவில்லையா?

காமராஜர் ஆட்சி காலம் முதல் 1990 வரையிலும் தமிழகத்தில் மின்வளர்ச்சி சீராக இருந்து உள்ளது. தமிழகம் உபரி மின்சக்தியைக் கொண்ட மாநிலமாக திகழ்ந்தது. 1992-1993 ஆம் ஆண்டு தமிழக மின் வாரிய வருமானம் ரூ.2500 கோடி. ஆனால் அதன்பின் வந்த எந்த அரசும் மின் உற்பத்தியை அதிகரிக்க ஆர்வம் காட்டவுமில்லை, பல திட்டங்கள் இருந்தும் அவற்றை முறையாக செயல்படுத்தவும் இல்லை.

அதன் விளைவு நாம் இன்று நாள் ஒன்றுக்கு ரூ.50 கோடி வீதம் ஆண்டுக்கு ஏறத்தாழ ரூ.18000 கோடி மதிப்பிலான மின்சாரத்தை வெளி மாநிலத்தில் இருந்து வாங்கி கொண்டு இருக்கிறோம். தமிழக வருமானத்தில் ஏறத்தாழ 30 சதவீதத் தொகையை தனியாரிடமிருந்து மின்சாரம் பெறுவதற்காக அரசு செலவழித்து வருகிறது.

1997 ஆம் ஆண்டிலேயே 2010 இல் தமிழகத்தின் மின் தேவை 19500 மெகாவாட் இருக்கும் என கணித்து தமிழக மின் வாரியம் அரசுக்கு அறிக்கை தந்தது. இந்த அறிக்கையை கருத்தில் கொண்டாவது ஏதாவது மின் உற்பத்தி திட்டங்களை முறையாக செயல்படுத்தி இருக்கலாம். இதை விட மின் உற்பத்தி மேம்பாட்டிற்கான நிதியை, தமிழக அரசு கடந்த ஐந்தாண்டு திட்டத்தில் ரூ.1000 கோடியிலிருந்து ரூ.800 கோடியாக குறைத்தது தான். மக்கள் வாழ்க்கையை முன்னேற்ற துடிக்கும் அரசு தான் இப்படி செய்யும் அல்லவா?........

வெளிநாடுகளில் இருந்து நிலக்கரியும் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து மின்சாரமும் வாங்குவது ஏன்?

அனல் மின்நிலையங்களுக்கு தேவையான நிலக்கரி பெருமளவில் வெளிநாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்தியாவிலும், தமிழகத்திலும் பல இடங்களில் நிலக்கரி கிடைக்கிறது. ஆனால் அவை தரமற்ற நிலக்கரி என்று கூறி, நமது அரசு வெளி நாடுகளில் இருந்து அதிக விலை கொடுத்து வாங்குகிறது.

அதைப்போல் வெளி மாநிலங்களில் இருந்து ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.12 முதல் ரூ.14 வரை கொடுத்து நாளொன்றுக்கு ரூ. 50 கோடிக்கு மேல் மின்சாரம் வாங்குகிறது. இதற்கு பதிலாக இந்த பணத்தை கொண்டு நமது சில மின் திட்டங்களை செயல்படுத்தினாலே போதும் பல நூறு மெகாவாட் மின்சாரம் நம்மால் உற்பத்தி செய்ய முடியும். ஆனால் இவற்றை செய்ய தயக்கம் காட்டுவதன் நோக்கம் என்னவாக இருக்க முடியும். ஏதோ ஆதாயம் இருப்பதால் தானே இவர்கள் தயங்குகிறார்கள் என்று எண்ண தோன்றுகிறது அல்லவா?............. 

மின் வெட்டினால் ஏற்பட்ட பயன் என்ன?

தொடர் மின்தடையின் காரணமாக பொது மக்களும், விவசாயிகளும், தொழிற்சாலைகளும், சிறு தொழில் நிறுவனங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. இதற்கு நேர் மாறாக மக்களின் அன்றாட பொருட்களின் விலையேற்றமும், பெட்ரோல், டீசல், காஸ் விலையேற்றமும் மக்களை வாட்டி வதைக்கிறது. விலையேற்றத்தை சமாளிக்க மக்கள் வருமானம் ஈட்ட வேண்டும். ஆனால் இப்படி கடுமையான மின்வெட்டு இருந்தால் எப்படி வருமானம் ஈட்ட முடியும்.

தாறுமாறான மின் வெட்டினால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் நிம்மதியாக படிக்க முடிவதில்லை. நம்ம மாணவர்கள் பெருபாலானோர் தேர்வுக்கு முந்தைய நாள் இரவில் தான் படிப்பார்கள். மின்வெட்டு இப்படி கொடுமையாக இருந்தால் பின் எப்படி மாணவர்களின் தேர்வு சதவீதம் அதிகமாகும். இதனால் மாணவர்களின் கல்வியின் எதிர்காலம் நாசமாகிறது.

தமிழ்நாட்டில் உள்ள வெளி நாட்டு தொழிற்சாலைகளுக்குத் தடையில்லாமல் மின்சாரம் வழங்குகிறது தமிழக அரசு. இவர்களுக்கு ஒரு யூனிட் மின்சாரம் ரூ.1.60 மட்டுமே. ஆனால் உள்நாட்டு தொழிற்சாலைகளுக்கு ஒரு யூனிட் மின்சாரம் ரூ.4.85. மேலும் நாள் ஒன்றுக்கு 4 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதனால் நாள் ஒன்றுக்கு கோயம்புத்தூர், ஈரோடு மாவட்டங்களில் மட்டும் ரூ.700 கோடி நஷ்டம் ஏற்படுகிறது. அப்படியானால் தமிழகம் முழுவதும் எவ்வளவு என்று நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள்...........

கட்டுக்கடங்காத மின் வெட்டு பிரச்சனைக்காரணமாக மின்வாரிய ஊழியர்களும் சிலவற்றை இழந்தனர். இவர்கள் வழக்கமாக வியாபாரிகளிமிடருந்தும், தொழிற்சாலைகளிமிடருந்தும் தீபாவளிக்கு இனாம் வாங்குவார்கள். அதிக மின் வெட்டின் காரணமாக மக்கள் கடுப்பில் இருந்ததால் கடந்த தீபாவளியில் இனாம் வாங்கமால் கமுக்கமாக இருந்துவிட்டனர்.

2003 ஆம் ஆண்டில் மின்சார சீர்திருத்த சட்டம் உருவாக்கப்பட்டு,தனியார் நிறுவனங்கள் மின் உற்பத்தி செய்ய சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டது. இந்த சட்டம் தனியார் மின்உற்பத்தி நிறுவனங்களுக்கு பல சலுகைகளை வழங்கியது. இதன் மூலம் 7000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய தனியார் நிறுவனங்கள் ஒப்புக்கொண்டன. ஆனால் அவை தற்போது 1200 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்கிறது. இந்த திட்டங்களையாவது முறையாக செயல்படுத்தி இருந்தால் இப்போது இந்த மின்வெட்டு கொடுமையில் இருந்து தமிழகம் தப்பித்து இருக்கலாம்.

மண்ணை கவ்விய மக்கள் போராட்டம்:

மே மாதம் 4ம் தேதி கோவையில் தமிழகத்தின் கடுமையான மின்வெட்டை கண்டித்து பல்லாயிரம் மக்கள் திரண்ட போராட்டம் நடந்தது. தொழிலாளிகள், வியாபாரிகள், பொதுமக்கள் திரண்ட கூட்டத்தினால் கோவை நகரமே குலுங்கியது. ஆனால் அப்போது தமிழ் நாட்டில் தேர்தல் முடிந்து, வாக்குகள் எண்ணப்படமால் இருந்தது. அப்போது தமிழ் நாடு தேர்தல் ஆணையம் கட்டுப்பாட்டில் இருந்ததால் அந்த போராட்டம் வீணாக போனது.
இந்த போராட்டம் முன்று அல்லது நான்கு மாதங்களுக்கு முன் நடைபெற்றிருந்தால் கூட அப்போதைய அரசுக்கு ஏதாவது பயம் ஏற்பட்டு மின்வெட்டை குறைக்க வழி எடுத்திருக்கும். 

ஏதாவது மின் உற்பத்தி திட்டங்கள் போடபட்டதா?

நீங்கள் ஆச்சர்யப்படும் அளவுக்கு ஒரு நீண்ட பட்டியலை கீழே காணலாம்.

** வடசென்னை 1200 மெகாவாட் திறன்கொண்ட இரண்டாம் கட்ட முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை அனல்மின் நிலைய மின்திட்டங்கள்.

** மேட்டூர் 600 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் திட்டம் (நிலை 3).

** 40 மெகாவாட் திறன் கொண்ட நீர் மின் நிலைய திட்டங்கள்.

** தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் 1,600 மெகாவாட் அனல் மின் திட்டம்.

** ஜெயங்கொண்டம் மின்வாரியமும், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் 500 மெகாவாட் மின் உற்பத்தி திட்டம்.

** குந்தாவில் 500 மெகாவாட் மின் உற்பத்தி திட்டம்.

** மரபு சாரா எரிசக்தி மூலம் கோயம்பேட்டில் கிடைக்கும் காய்கறி கழிவுகளிலிருந்து 550 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டம். 

** தமிழ் நாட்டில் உள்ள 12 சர்க்கரை ஆலைகளில் கிடைக்கும் கரும்பு சக்கையில் இருந்து 180 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திட்டம்.

** ஆரல்வாய்மொழி, கயத்தாறு, தேனி, உடுமலை ஆகிய, நான்கு இடங்களில், 400 மெகா வாட் சேமிப்புத் திறனுள்ள, ஆறு துணை மின் நிலையங்கள் மின் உற்பத்தி திட்டம்.

இப்படி பல திட்டங்கள் இருந்தும் அவற்றை முறையாக செயல்படுத்த நல்ல அரசும் இல்லை, நல்ல அதிகாரியும் இல்லை.

மின் உற்பத்தியை பெருக்க புதிய வழிகள் ஏதாவது உள்ளதா?

குப்பை கழிவுகள் மூலம் மின் உற்பத்தி:

சென்னை, மதுரை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில் குவியும் குப்பைகளை கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். இதன்மூலம் குப்பைகளையும் அப்புறப்படுத்தவும் முடியும், மக்களுக்கு மின்சாரமும் கிடைக்கும்.

சூரிய மின் சக்தி:

2009 ஆம் ஆண்டு, நவம்பரில் ஜவகர்லால் நேரு சோலார் மின் திட்டத்தை, பிரதமர் மன்மோகன் சிங் துவக்கி வைத்தார். இந்த திட்டத்தின்படி 2022ம் ஆண்டில் இந்தியா முழுவதும் 20 ஆயிரம் மெகாவாட் சூரிய மின்உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது.

சூரிய ஒளி மின் திட்டம் மட்டுமே, அனைத்துப் பகுதிகளிலும் செயல் படுத்த முடியும். அனல், புனல், அணு மின் நிலையங்களை எல்லா இடத்திலும் அமைக்க முடியாது.சூரிய ஒளி மின் திட்டங்களை செயல்படுத்த காற்றாலையை விட மூன்று மடங்கு செலவு செய்யவேண்டும். ஆனால் இதன்மூலம் வருடம் முழுவதும் ஒருகுறிப்பிட்ட அளவு மின்சாரத்தை நிரந்தரமாக பெற முடியும். மற்ற மின் திட்டங்களை அமைக்க 5 முதல் 7 ஆண்டுகள் வரை ஆகும். ஆனால் சூரிய மின் திட்டத்தை அமைக்க ஓராண்டுகள் மட்டுமே ஆகும்.

கிராமங்களில் உள்ள ஆடு, மாடுகளின் சாணத்தின் மூலமும் குறிப்பிட்ட அளவு மின்சாரத்தை பெற முடியும். 

காவிரிப்படுகையில் கிடைக்கும் 20 லட்சம் கியூபிக் மீட்டர் இயற்கை வாயுவைக் கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்ய வாய்ப்புள்ளது.

தமிழ் நாட்டில் திருச்சியில் உள்ள பெல் தொழிற்சாலை உலகில் உள்ள 42 நாடுகளுக்கு மேல் மின்உற்பத்திக் கருவிகளை தயாரித்து தரும் பெருமை கொண்டது. இவ்வளவு பெருமை கொண்ட நிறுவனத்தை நமது அரசு பயன்படுத்தி மின் உற்பத்தி பெருக்க திட்டம் தீட்டலாம். ஆனால் இதை எல்லாம் செய்ய அரசுக்கு எங்கே நேரம் இருக்கிறது?..........

மின்சாரத்தை சேமிக்க ஏதாவது வழிமுறைகள் உள்ளதா?

* தேவையற்ற நேரத்தில் பயன்படுத்தப்படும் மின் சக்தியை குறைத்தால் மக்களுக்கு வழங்கப்படும் ஐந்து சதவீதத்தில் ஒரு சதவீதம் வரை மின்சாரத்தை சேமிக்கலாம்.

* மக்கள் நடமாட்டம் அறவே இல்லாத இரவு நேரத்திலும் விளம்பர பலகைகள் அதிகளவு மின்சாரத்தை குடித்தவாறு ஓளிருகின்றன. இதை தடுப்பதாலும் குறிப்பிட்ட அளவு மின்சாரத்தை சேமிக்கலாம்.

* குண்டு பல்புக்கு பதிலாக சிறுகுழல் விளக்குகளை பயன்படுத்தினால் ஆண்டுக்கு 1000 மெகாவாட் மின்சாரம் சேமிக்க முடியும்.
தெரு விளக்குகளுக்கு சூரிய மின்சக்தியை பயன்படுத்துவதன் மூலமும் மற்ற வகை மின்சாரத்தை சேமிக்கலாம்.

* மின்கசிவு, மின் திருட்டு ஆகியவற்றை கட்டுப்படுத்தினால் பல நூறு மெகாவாட் மின்சக்தியை நம்மால் சேமிக்க முடியும்.

* மின் உற்பத்திக்கு எதுவும் செய்யாத இந்த அரசுகள் மின்சாரத்தை சேமிக்க இப்படி பலவழிகள் இருந்தும் எந்த நடவடிக்கையும் எடுப்பதும் இல்லை. மக்களை சேமிக்கவும் ஊக்குவிப்பதும் இல்லை.

* மக்களும் அரசாங்கத்தை மட்டும் குறை கூறிக்கொண்டு மின்சாரத்தை வீணடிக்கக்கூடாது. மின் சக்தியை சேமிக்க மக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மின் சேமிப்பும் மின் உற்பத்திக்கு ஈடான ஒன்று தானே.....

பொறுப்புள்ள கலெக்டர்?

விளம்பரப் பலகைகளுக்கு தடையற்ற மின்சாரம் தருவது பற்றி கடந்த மாதம் தமிழக மின்வாரிய தலைவர் சி.பி.சிங்கிடம் கேட்டபோது, தானாகவே குறுக்கிட்ட ஒரு கலெக்டர் "ஒரு விளம்பரப் பலகையில், 40 வாட்ஸ் பல்பு போடப்படுகிறது; அதனால், பெரிதாக மின்சாரம் செலவாகிவிடாது' என, படு ஆவேசமாகப் பதிலளித்தார். இதுபோன்ற பொறுப்புள்ள அதிகாரிகள் இருந்தால் நம் நாடு அடுத்த ஆண்டே வல்லரசாகிவிடும் அல்லவா..........

அரசு ஏன் மின்உற்பத்தி திட்டங்களை நிறைவேற்ற தயங்குகிறது?

மின் உற்பத்தி திட்டங்களை நிறைவேற்ற குறைந்தது ஐந்தாண்டுகள் முதல் ஆறு ஆண்டுகள் ஆகும். அதற்குள் ஆட்சி மாற்றம் நிகழ்ந்து விடுமோ என்ற அச்சத்தின் காரணமாகவே திமுக, அதிமுக அரசுகள் மின் திட்டங்கள் செயல்படுத்துவதில் ஓர வஞ்சனை செய்தன. அதனால் தான் இரு அரசுகளும் குறுகிய கால இலவச திட்டங்களை செயல்படுத்தி மக்களை கவர்ந்து விடலாம் என நினைத்தார்கள். அதன் விளைவு திமுக அரசு கடந்த ஆட்சியில் பல நல்ல திட்டங்களை செயல்படுத்தியும் சட்டசபை தேர்தலில் படு தோல்வி அடைந்தது. திமுக தோல்விக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் முதல் கராணமாக இருந்தாலும், இரண்டாம் இடம் பெற்றது
மின் வெட்டு பிரச்சனை தான்........

அரசியல்வாதிகள் ஓட்டுக்காக மட்டும் திட்டம் தீட்டுகிறார்களே தவிர, நாட்டுக்காக திட்டமிடுவதில்லை.மக்கள் நலனில் அக்கறை இல்லாத மக்கள் பிரதிநிதிகளை திரும்பப்பெறும் சட்டம் சில நாடுகளில் உள்ளது. அதுபோன்ற சட்டம் நம் நாட்டிலும் கொண்டுவரப்பட்டால் தான் மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் அவர்கள் கவனம் செலுத்துவார்கள்.ஆனால் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் இந்தியாவில் எந்த ஒரு எம்.எல்.ஏவும், எம்.பியும் 5 ஆண்டுகள் முழுமையாக காலம் தள்ள முடியுமா?.....

புதிய அரசு என்ன செய்ய போகிறது?

தமிழக மின் வாரியத்தில் 60 சதவிகிதம் வரை பணியாளர் பற்றாக்குறை உள்ளது. முதலில் இதை சரி செய்யா வேண்டும்.
புதிய முதல்வர் ஜெயலலிதா ஆட்சி அமைக்க கவர்னரை சந்தித்திதுவிட்டு வெளியே வந்த உடனேயே தமிழகத்தில் மின்வெட்டு பிரச்சனை விரைவில் தீர்ந்து, தமிழ்நாடு ஒளிமயமாக மாறபோகிறது என பேட்டி கொடுத்தார்.அதற்குகேற்றார் போல் புதிய மின் துறை அமைச்சராக நத்தம் விஸ்வாநாதனை அறிவித்து, மின் பிரச்சனையை தீர்க்க இரண்டு முறை ஆலோசனை நடத்தியதாகவும், சூரிய மின்சக்தி மூலம் மின் வெட்டு பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என புதிய அரசு நம்புவதாகவும் செய்திகள் வருகிறது. எப்போதும் ஆரம்பம் நல்லாதான் இருக்கும். ஆனால் முடிவு நல்ல இருந்தால்தான் மக்களின் மின்வெட்டு பிரச்சனை தீரும்.

மேலும் அரசு மக்களிடம் மின் சிக்கனம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், அதைப்போல் மின்சேமிப்பிற்கான பொருட்களை பயன்படுத்துவதையும், அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும். சூரியசக்திக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மின்உற்பத்தி மற்றும் சேமிப்புக்கு என தனி துறையை ஏற்படுத்தினால் எதிர்காலத்தில் மின் பற்றாக்குறையை எளிதில் குறைக்கலாம். ஆனால் நமது அரசு இது போன்ற வெட்டிவேலையை செய்யுமா? பொறுத்து இருந்து பார்ப்போம்.

ஆனால் இந்த அரசும் மின்வெட்டு பிரச்சனையில் அலட்சியமாக இருந்தால், மேற்குவங்கத்தில் 34 வருட கம்யூனிஸ்ட் ஆட்சியை மக்கள் தூக்கி எரிந்தது போல தமிழ் நாட்டில் 44 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் திமுக, அதிமுக ஆட்சியை தூக்கி எறிய வேண்டிய சூழ்நிலைக்கு மக்கள் தள்ளப்படலாம்.......

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...