உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Tuesday, January 17, 2012

எழிலகம் அரசு அலுவலகங்கள் தீ விபத்து, முக்கிய ஆவணங்களை அழிக்க சதியா?

சென்னையில், சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் நேற்றுமுன்தினம் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் அரசு அலுவலகங்கள் தீக்கிரையாயின. முக்கிய  ஆவணங்கள் சாம்பல் ஆயின. 
தீயை அணைக்க போராடியபோது, இடிபாடுகளில் சிக்கி  தீயணைப்பு வீரர் ஒருவர் பரிதாபமாக பலியானார். பெண் அதிகாரி உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். 200 ஆண்டு பழமை வாய்ந்த இந்த கட்டிடத்தில் தொழில் மற்றும் வணிகத்துறையின் கமிஷனர், இயக்குனர் அலுவலகம் மற்றும் சமூக நலத்துறையின் இயக் ககம் ஆகியவற்றின் அலுவலகங்களும் இயங்கி வருகின்றன. 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிவதால் வழக்கமாக  பரபரப்பான சூழல் காணப்படும். நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணி அளவில் சமூகநல இயக்ககம் செயல்படும் அலுவலக அறையில் இருந்து கரும்புகை வெளியேறியது. அங்கு இருந்த செக்யூரிட்டி கபூர் பேக் இதை கவனித்தார். உடனடியாக அந்த அலுவலக கட்டிடத்தின் ஜன்னல் வழியாக பார்த்தபோது, 

அந்த அறையின் உட்பகுதி முழுவதும் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. அதிர்ச்சி அடைந்த அவர், அறையின் சாவியை தேடியபோது கிடைக்கவில்லை. என்னசெய்வதென்று தெரியாமல் திகைத்த அவர் எதிரே உள்ள அண்ணா சதுக்கம் போலீஸ் நிலையத்திற்கு ஓடிச் சென்று தகவல் தெரிவித்தார். அங்கு இருந்த தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். உடனே 3 வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அதற்குள் தீ வேகமாக பரவியதில் அலுவலக கட்டிடம் பற்றி எரிந்து கொண்டிருந்தது. 

தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடினர். ஆனால் தீயின் வேகம் அதிகரித்துக் கொண்டே சென்றதால், நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து 5 தீயணைப்பு வண்டிகளும், 15 லாரிகளில் தண்ணீரும் வரவழைக்கப்பட்டது. மத்திய தீயணைப்பு துணை மண்டல அதிகாரி பிரியா ரவிச்சந்திரன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். தொழில் வணிக இயக்குனர் அலுவலகத்திற்குள் தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கும் போது பிரியா ரவிச்சந்திரன், அசோக்நகர் தீயணைப்பு நிலைய அதிகாரி முருகன் ஆகியோர் தண்ணீரை பீய்ச்சி அடித்து கொண்டே ஒரு வாசல் வழியாக உள்ளே சென்றனர். இதைத் தொடர்ந்து மற்றொரு வாசல் வழியாக தேனாம்பேட்டை தீயணைப்பு வீரர் அன்பழகன் தண்ணீரை அடித்துக்கொண்டே சென்றார். இவருக்கு பின்னால் மற்றொரு வீரர் பிரபாகரனும் சென்றார். 

அவர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக கட்டிடத்தின் மேல்சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதில் கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில், கட்டிட இடிபாடுக்குள் முழுவதுமாக சிக்கிய அன்பழகன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.  அதிகாரி பிரியா, முருகன் மீதும் சுவர் இடிந்து விழுந்தது. அவர்கள் அதனை தாங்களாகவே அப்புறப்படுத்தி ரத்த காயங்களுடன் வெளியே வந்தனர். இதில் பிரியாவுக்கு ஒரு பகுதி முகம் தீயில் கருகி விட்டது. மேலும் முருகன், பிரபாகரனுக்கு கை, கால், முதுகு பகுதி போன்ற இடங்களில் காயம் ஏற்பட்டது.

  இதில் அதிகாரி பிரியாவுக்கு 42 சதவீதம் பலத்த தீக்காயம் ஏற்பட்டுள்ளது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.  தொடர்ந்து இரு அலுவலகம் முழுவதும் தீ கடுமையாக  பரவியதால்,  மேலும் 15 தண்ணீர் லாரிகள், 10 தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள், 2 ராட்சத  லிப்ட்  உடனடியாக வந்தது. இவற்றின் மூலம்  9 மணி நேரம் போராடி காலை 9.30 மணி அளவில் தான் போராடி வீரர்கள் தீயை அணைத்தனர். அதற்குள் 2 அலுவலக கட்டிடமும் முழுமையாக எரிந்தன. இதில் அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்கள் முழுவதுமாக எரிந்து நாசமானது. 

தீ விபத்தில் மேல் கூரை மீது இருந்த தேக்கு மர கட்டைகள் எரிந்ததால், மேற்சுவர் இடிந்து விழுந்தன. அந்தக் கட்டிடம் கீழ் தளம் மற்றும் முதல் தளம் கொண்டது. மேல் கூரை இடிந்து, முதல் தளம் மீது விழுந்ததால், அதுவும் இடிந்து கீழே விழுந்தது.  அலுவலகத்தின் கதவுகளும் பாரம்பரியம் மிக்க தேக்கு மரத்தால் செய்யப்பட்டவை. அதனால் தீ நீண்ட நேரம் நின்று எரிந்தது. தீக்கிரையான இந்த  கட்டிடம் இப்போது எலும்புக் கூடாக காட்சியளிக்கிறது.துணிச்சலான பெண் அதிகாரி

தீவிபத்தில் காயம் அடைந்த மத்திய மண்டல தீயணைப்பு துறை அதிகாரி பிரியாவின் கணவர் ரவிச்சந்திரன் வருமானவரித் துறையின் உதவி கமிஷனராக உள்ளார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். நுங்கம்பாக்கம் ஆயக்கர் பவனில் வசித்து வருகிறார். பிரியா இந்தியாவின் முதல் பெண் தீயணைப்பு துறை மண்டல அதிகாரி ஆவார். 
 இவர் பயிற்சியின் போது குழந்தை பிறந்தது. அதனால் தீயணைப்பு துறை பயிற்சி எடுக்க முடியாமல் போய் விடக்கூடாது என்பதற்காக தன்னுடன் குழந்தையை வைத்துக்கொள்ள அரசிடன் சிறப்பு அனுமதி பெற்றார். தாம்பரம் பயிற்சி கல்லூரியில் பயிற்சி எடுத்தார். 

 இவர் சாதாரண தீவிபத்து என்றாலும் கூட சம்பவ இடத்திற்கு சென்று விடுவார். தானே முன்வந்து தீயை அணைக்கும் போராட்டத்தில் ஈடுபடும் துணிச்சல் மிக்கவர். கடந்த ஆண்டு நடந்த மேற்கு மாம்பலத்தில் சினிமா வெடிகுண்டு வெடித்து கட்டிடம் இடிந்த போது கூட இவர் இடிபாடுகளை அகற்றுவதில் தீவிரம் காட்டினார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தென்சென்னை மண்டல அதிகாரியாக இருந்தார். தற்போது தான் மத்திய மண்டலத்திற்கு மாற்றம் ஆகியுள்ளார். 
தீயணைப்பு வீரர் உயிரிழந்தது எப்படி?

தீப்பிடித்து எரிந்த கட்டிடத்தில் தேக்கு மரங்கள் மற்றும் பைல் காகிதங்கள்  அதிகளவில் இருந்துள்ளது. இதனால், வெளியில் நின்று தீயை அணைத்தால் விரைவாக அணைக்க முடியாது, கட்டிடத்தின் உள்பகுதியில் அதாவது தீப்பிடித்துக் கொண்டிக்கும் பகுதிக்கு மிக அருகில் சென்று தீயை அணைத்தால் மட்டுமே உடனடியாக அணைக்க முடியும் என்று தீயணைப்பு வீரர்கள் முடிவு செய்தனர்.

இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் கட்டிடத்தின் உள்ளே தீ எரிந்து கொண்டிருந்த பகுதிக்குள் ‘ஊடுருவி’ சென்று அணைக்க முயற்சி செய்தனர். அப்போது கோட்ட தீயணைப்பு அதிகாரி பிரியா ரவிச்சந்திரனும், நேரடியாக தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த பகுதிக்கு சென்று மற்ற தீயணைப்பு வீரர்களுடன் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டார். அவர் இருந்த பகுதியில் 10 தீயணைப்பு வீரர்கள் இருந்தனர்.

கட்டிடத்தின் மேற் பகுதியில் உள்ள தேக்குமர கட்டையில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்துக் கொண்டிருந்தனர். அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக கட்டிடத்தின் மேற்கூரை அப்படியே தீயணைப்பு வீரர்கள் மீது விழுந்து அமுக்கியது. ஒருபுறம் மளமளவென எரியும் தீ, மற்றொரு புறம் செங்கல், சுண்ணாம்பு அடங்கிய மேற்கூரையின் இடிபாடுகளில் தீயணைப்பு வீரர்கள் சிக்கிக் கொண்டனர். அவர்களில் 6 பேர் ஓரமாக இருந்ததால் லேசான காயத்துடன் தப்பித்து வெளியே வந்து விட்டனர்.

ஆனால் பிரியா ரவிச்சந்திரன் உள்பட 4 பேர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.  இதை கவனித்த மற்ற பகுதியில் தீயை அணைத்துக் கொண்டிருந்த தீயணைப்பு வீரர்கள் உடனே அந்த பகுதிக்கு வந்தனர். ஆனாலும் கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கி அன்பழகன் என்ற தீயணைப்பு வீரர் அங்கேயே பரிதாபமாக இறந்தார்.

படுகாயம் அடைந்த தீயணைப்பு அதிகாரி பிரியா ரவிச்சந்திரன் உடனடியாக அப்போலோ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக தூக்கிச் செல்லப்பட்டார். அசோக்நகர் தீயணைப்பு நிலைய அதிகாரி முருகன், தேனாம்பேட்டை தீயணைப்பு வீரர் பிரபாகரன் ஆகிய இரண்டு பேரும் முதலில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு மூன்று தீயணைப்பு வீரர்களுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 


முக்கிய ஆவணங்களை அழிக்க சதியா?

இருதுறைகளின் முக்கிய ஆவணங்களை அழிக்க யாராவது சதி செயலில் ஈடுபட்டிருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனால் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அதற்கான தடயங்கள் எதுவும் கிடைக்கிறதா எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  மின்கசிவால் விபத்து நடந்ததா என விசாரிக்க மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு நடத்தி வருகின்றனர். 

இங்குள்ள அலுவலகத்திற்கு கடந்த 14, 15, 16 ஆகிய 3 தினங்களில் விடுமுறை. எனவே 13ம்தேதி அலுவலகத்திற்கு யார் யார் வந்திருந்தார்கள், அன்று மாலை இறுதியில் யார் வேலை முடித்து சென்றார்கள் என்பது குறித்த விசாரணையும் நடத்தப்படுகிறது.  அந்த காலத்தில் மேல் தளம் அமைக்க சென்ட்ரிங் அமைப்பதற்கு பதிலாக தேக்கு மர கட்டை களை அடுக்கி அதன் மீது சுண்ணாம்பு கலவையை பயன்படுத்தி மேல் தளம் அமைப்பார்கள். தீயில்  கட்டிடத்தை தாங்குவதற்காக வைக்கப்பட்ட தேக்கு மரக்கட்டைகள் அனைத்தும் எரிந்து சாம்பலானது. இதையடுத்து கட்டிடத்தின் மேல் பகுதி இடிந்து விழுந்தது.இறந்த தீயணைப்பு வீரரின் மகளுக்கு 30ம்தேதி திருமணம்

இடிபாடுகளில் சிக்கி இறந்து போன தீயணைப்பு வீரர் அன்பழகனுக்கு சொந்த ஊர் சிதம்பரம் சேதியூர். தற்போது சென்னையில் சைதாப்பேட்டை குமரன் காலனி பாரதிதாசன் தெருவில் வசித்து வந்தார். இவரது மனைவி அமுதா(45). இவர்களுக்கு ஷாலினி(24), ஷீலா (24) ஷர்மிளா(23) என்ற மகள்களும், சங்கர் (20) என்ற மகனும் உள்ளனர். இதில் மூத்த மகளான ஷாலினிக்கு வரும் 30ம்தேதி திருமணம் நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அன்பழகன் செய்து வந்தார். இந்நிலையில் துரதிர்ஷ்டவசமாக அவர் இறந்து போனது குடும்பத்தினரை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மகள் ஷாலினி கூறுகையில், “ எனது திருமணத்தை தடபுடலாக நடத்துவேன் என்று கூறிக்கொண்டே இருப்பார். ஆனால் இப்போது அவரது இறுதிச் சடங்கை செய்ய வேண்டியதாகி விட்டதே என்றபோது அவரால் அதற்கு மேல் பேச முடியவில்லை.எதிர்பாராத சம்பவம் போலோ நாத் பேட்டி

தீ விபத்து நடந்த பகுதியில் போலீஸ் கமிஷனர் திரிபாதி மற்றும் தீயணைப்பு துறை இயக்குனர் போலோநாத் ஆகியோர் ஆய்வு நடத்தினர். பின்னர் போலோநாத் கூறுகையில், ‘‘முதலில் தீ விபத்து என்று தான் தகவல் வந்தது. தீ விபத்தை கட்டுப்படுத்த மண்டல அதிகாரி பிரியா தலைமையில் அனைவரும் ஈடுபட்டிருந்தனர். அப்போது கட்டிடத்தின் மேல் கூரை முழுவதும் அப்படியே இடிந்து விழுந்தது. 

இதில் தீயணைப்பு வீரர் அன்பழகன் இறந்து விட்டார். பழங்கால கட்டிடம் என்பதால் எதிர்பாராத விதமாக இந்த சம்பவம் நடந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக மற்றவர்கள் உயிர் பிழைத்துள்ளனர். தீ அணைப்பு பணியில் ஈடுபட்டிருந்த அன்பழகன் இறந்தது வருத்தத்தை அளிக்கிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து உரிய விசாரணை நடந்து வருகிறது’’ என்றார்.அதிகாரிகள் கார்கள் தப்பின

எழிலக வளாகத்தில் பல அரசு அலுவலகங்கள் உள்ளது. இங்கு பணிபுரியும் உயர் அதிகாரிகளை அழைத்துச் செல்லக்கூடிய கார்கள் அனைத்தும் தீவிபத்து ஏற்பட்ட 2 அலுவலகம் எதிரே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பெரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தும் இரவோடு இரவாக கார் டிரைவர்கள் வந்து தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள கார்களை பாதுகாப்பான இடத்தில் பார்க்கிங் செய்தனர்.பட்ஜெட் ஆவணங்கள் சாம்பல் 

சமூக நல இயக்ககத்தில் முக்கிய ஆணவங்கள் பாதுகாக்கப்பட்டு வந்தது. அதிக அளவில் இருந்ததால் சிலவற்றை அருகில் இருந்த மற்றொரு அலுவலக அறையில் வைத்திருந்தனர். இந்நிலையில், சில மாதங்களில் தமிழக பட்ஜெட் தொடர் கூடுவதால், சமூக நலத்துறை தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் தயார் செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. அவை அனைத்தும் எரிந்து சாம்ப லானதாக அங்கிருந்த சில அதிகாரிகள் கூறினர். மேலும் தொழில் வணிக இயக்குனர் அலுவலகத்தில் சென்னையில் உள்ள முக்கிய வணிக நிறுவனங்களின் ஆவணங்கள், சில நிறுவனங்கள் மீதுள்ள குற்றச்சாட்டுகள் அடங்கிய ஆவணங்கள் உள்ளிட பல ஆவணங் கள் வைக்கப்பட்டிருந்தது. இவை அனைத்தும் எரிந்து விட்டதாக தெரிகிறது.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...