உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Saturday, February 04, 2012

ஆண்டின் முதல் பொது வேலை நிறுத்தம் பிப்ரவரி 28, 2012

பிப்ரவரி 28, 2012
ஆண்டின் முதல் பொது வேலை நிறுத்தம் 
சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, பிஎம்எஸ், எச்எம்எஸ், யுடியுசி, டியுசிசி, ஏஐயுடியுசி, ஏஐசிசிடியு, எல்பிஎப், சேவா - ஆகிய 11 மத்திய தொழிற்சங்கங்கள் இணைந்து விடுத்துள்ள அறைகூவல் பிப்ரவரி 28 2012 பொது வேலைநிறுத்தம். நாட்டில் நடைபெறவுள்ள 14வது பொது வேலைநிறுத்த அறைகூவல் இது.
உழைப்பாளி மக்கள் அனைவரையும் பாதிப்புக்குள்ளாக்கியுள்ள கடுமையான விலை உயர்வு, பொது வினியோகம், வேலைவாய்பு, அனைவருக்கும் ஓய்வூதியம் உள்ளிட்டு சமூக பாதுகாப்பு மற்றும் நல திட்டங்கள், தனியார்மயம், ரூ.10,000/- குறைந்தபட்ச மாத ஊதியம், காண்டிராக்ட் பெயரில் தொழிலாளர்கள் சுரண்டப்படும் முறைக்கு எதிர்ப்பு, தொழிலாளர் நல சட்டங்கள் அமுலாக்கம், ஐஎல்ஓ தீர்மானங்கள் 87-சங்கம் சேரும் உரிமை மற்றும் 98-கூட்டு பேர உரிமை ஆகியவற்றிற்கு உடனடி அங்கீகாரம் - போன்றவை வேலைநிறுத்த கோரிக்கைகளாக முன்வைக்கப்பட்டுள்ளன.
நாடு சுதந்திரம் பெற்ற பிறகு மக்களின் பொதுவான கோரிக்கைகளுக்காக முதல் பொது வேலை நிறுத்தம் நடைபெற்றது 1982ம் ஆண்டில் ஜனவரி 19 அன்று! 
எட்டு மத்திய தொழிற்சங்கங்களும் 55 சம்மேளனங்களும் இணைந்து விடுத்த அறைகூவல் அது. கடுமையான அடக்குமுறைகள் கட்டவிழ்க்கப்பட்ட பின்னணியில் மிக வெற்றிகரமாக நடைபெற்ற முதல் பொது வேலைநிறுத்தம் அது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆயிரகணக்கான தோழர்கள் கைது செய்யப்பட்ட பின்னணியிலும் எழுச்சியுடன் நடைபெற்ற வேலைநிறுத்தம் அது. வேலைநிறுத்த நாள் அன்று நாடு முழுவதும் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டார்கள். நடைபெற்ற துப்பாக்கிகூட்டில் தமிழ்நாட்டில் அஞ்சான், நாகூரான், ஞானசேகரன் ஆகிய மூன்று விவசாய தோழர்கள் உள்ளிட்டு 10 பேர் உயிர் தியாகம் செய்த உணர்வுமிக்க வேலைநிறுத்தம் அது.
ஆட்சியாளர்களின் மக்கள் விரோத தொழிலாளர் விரோத பொருளாதார கொள்கைகளுக்கெதிராக மத்திய தொழிற்சங்கங்களும் சம்மேளனங்களும் இணைந்து தொடர்ச்சியான போராட்டங்கள், பொது வேலை நிறுத்தங்கள் நடத்தி வந்துள்ளன. அந்த வரிசையில் இது 14வது பொது வேலை நிறுத்தம். மக்கள் நலனை காவுகொடுக்கும் ஆட்சியாளர்கள் பின்பற்றிவரும் நவீன பொருளாதார கொள்கைகளின் விளைவாக பொருளாதார நெருக்கடிகள் அதிகரித்துவரும் நிலையில் நடைபெற்று முடிந்துள்ள வேலைநிறுத்தங்களில் அனைத்துப் பகுதி உழைப்பாளி மக்களின் ஈடுபாடும் பங்கேற்பும் அதிகரித்த வண்ணம் உள்ளது. 
உலகின் பல நாடுகளில் பெரும்பகுதி மக்கள் பங்குபெற்ற எழுச்சிமிக்க இயக்கங்கள், போராட்டங்கள் நிறைந்த ஆண்டாக 2011ம் ஆண்டு முடிந்துள்ளது.
முதலாளித்துவ பொருளாதாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி உலக உழைப்பாளி மக்களின் போராடி பெற்ற உரிமைகள் மீதும் அவர்களின் வாழ்நிலைகளின் மீதும் தாக்குதல் தொடத்ததோடு சொல்லொன்னா துயரங்களையும், துன்பங்களையும், இழப்புகளையும், நெருக்கடிகளையும் அவர்கள் மீது சுமத்தியுள்ளது.
இலட்சக்கணக்கான தொழிலாளிகள் - ஆண்களும் பெண்களும் - வேலையை இழந்தனர். பாதுகாப்பான நிரந்தர வேலை இனி கிடைக்கும் என்ற நம்பிக்கையை இழந்துவிட்டார்கள் இலட்சக்கணக்கான இளைஞர்கள். நெருக்கடியை சமாளிக்க வளர்ச்சியுற்ற முதலாளித்துவ நாடுகளின் அரசுகள் பணியிடங்களை, ஊதியத்தை, ஓய்வூதியத்தை, கல்வி மருத்துவம் உள்ளிட்ட சமூக பாதுகாப்பு சலுகைகளை வெட்டி சுருக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டன. ஏழைத் தொழிலாளிகளை சக்கையாய் பிழிந்து செல்வந்தர்களை கொழுக்க வைக்கவும், ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்குமான இடைவெளியை மேலும் மேலும் அதிகரிக்கவும் தான் இந்த நடவடிக்கைகள் உதவியுள்ளன.
இந்த அநீதியை எதிர்த்து 2011ம் ஆண்டில் உலகம் முழுவதும் மக்கள் வெகுண்டெழுந்தனர். தொழிலாளி வர்க்கம் ஐரோப்பாவிலும், ஆசியா மற்றும் வட ஆப்பிரிக்காவிலும், அமெரிக்காவிலும் கூட ஆளும் வர்க்கத்திற்கெதிரான மோதல்களில் ஈடுபட்டனர். போராடி பெற்ற உரிமைகளை பாதுகாத்துக்கொள்ளவும் தாக்குதல்களை முறியடிக்கவும் இயக்கங்களை நடத்தினர். பகாசூர நிதி நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட நெருக்கடியின் சுமைகள் சாதாரண மக்கள் மீது சுமத்தப்பட்ட அநீதியைக் கேள்வி கேட்க ஆரம்பித்து, பொருளாதாரத்தில், அதில் ஈடுபட்டுள்ள 99 சாதமாக விளங்கும் மக்களாகிய, தங்களுடைய நியாயமான உரிமையை கேட்டு நிதி மூலதனத்தின் அடையாளமாய் விளங்கும் 'வால்ஸ்டிரீட்டை கைப்பற்றுவோம்' என்ற போராட்டத்தில் இறங்கினர். இளைஞர்கள் பெருவாரியாக பங்குபெரும் இந்த போராட்டங்கள்/இயக்கங்கள் மூலமாக பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முதலாளித்துவ அரசுகள் மேற்கொண்ட நடவடிக்கைகளை கேள்வி கேட்பது, பெருவாரியான மக்களை பாதிப்புக்குள்ளாக்கிய புதிய பொருளாதார தாராளமயக் கொள்கைகளை எதிர்ப்பது என்று நின்றுவிடாமல் சோவியத் ரஷ்யாவில் சோஷலிச வீழ்ச்சிக்குப் பிறகு கடந்த இருபது ஆண்டுகளாக முதலாளித்துவம் தான் வரலாற்றின் இறுதிகட்டம் என்று இறுமாப்போடு இருந்த முதலாளித்துவ அமைப்பிற்கே சவால் விடுக்கப்படுகிறது.
கிரீஸில் 2011ம் ஆண்டில் மட்டும் 7 பொது வேலை நிறுத்தங்கள் நடைபெற்றுள்ளன. பிரிட்டனில் 30 ஆண்டுகளுக்கு பிறகு 20 லட்சம் தொழிலாளர்கள் கலந்து கொண்ட வரலாற்று சிறப்புமிகு வேலை நிறுத்தம் 2011ம் ஆண்டு நவம்பர் 30 அன்று நடைபெற்றுள்ளது. 2011ம் ஆண்டில் அனைத்து வளர்சிசுயுற்ற நாடுகளில் தொழிலாளர்களும் இளைஞர்களும் ஈடுபடாத நாடே இல்லை என்று கூறக்கூடிய அளவிற்கு ஏதோ ஒரு வடிவத்தில் போராட்டம் நடைபெற்றுள்ளது.
99% மக்களின் வாழ்க்கைக்காக நடக்கும் உலக அளவிலான இயக்கங்களின் ஒரு பகுதியாக இந்தியாவிலும் பொது மக்களும் தொழிலாளிகளும் போராட்டத்தில் பங்கெடுக்கின்றனர் என்பது நாம் பெருமைப்பட வேண்டிய விஷயம். 2011ம் ஆண்டில் தொழிலாளி வர்க்கம் இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவிற்கு தங்களுடைய பிரச்னைகளுக்காக மட்டுமல்லாமல் இதர பகுதி உழைக்கும் மக்களுக்காக போராட்டங்களில் பங்கெடுத்துள்ளனர். தொழிலாளி வர்க்கம் மேலும் மேலும் நெருக்கமாக ஒன்றிணைந்ததை 2011ம் ஆண்டில் கண்டோம். பிப்ரவரி 23 2011ம் ஆண்டு லட்சக்கணைக்கான தொழிலாளிகள் டெல்லி தெருக்களில் பேரணியாக திரண்டனர். லட்சகணக்கான தொழிலாளர்கள் நவம்பர் 8ந் தேதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைதானார்கள்.
மத்தியில் ஆளும் அரசு தொழிலாளி வர்க்கத்தின் பிரச்னைகள் குறித்து உணர தயாராக இல்லை. உலகம் முழுவதும் புதிய பொருளாதாரக் கொள்கைகள் ஏற்படுத்திவரும் கஷ்டங்களை துயரங்களை கண்ட பின்பும் விவசாயிகள் மற்றும் தொழிலாளிகளின் நியாயமான கோரிக்கைகளை தீர்க்க முன்வராமல் உள்நாட்டு மற்றும் பன்னாநாட்டு கார்பொரேட் நிறுவனங்களின் கோரிக்கைகளை தீர்ப்பதில் அக்கறை காட்டுகின்றனர். பாராளுமன்றத்தில் நிலுவையில் உள்ள பென்ஷன் நிதியை தனியாரிடம் ஒப்படைக்கும் மசோதா, நிதித்துறையில் அந்நிய நேரடி முதலீட்டினை அனுமதிக்கும் மசோதாக்களை பிரதான எதிர்கட்சியான பாஜக-வின் உதவியுடன் நிறைவேற்ற துடித்ததிலிருந்தும் முனைப்பான முயற்சிகளிகளில் ஈடுப்பட்டுள்ளதிலிருந்தும் இது தெளிவாகிறது.  பெருமளவில் மக்கள் எதிர்ப்பின் காரணமாக சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் முடிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
சதாரண உழைப்பாளி மக்களைப்பற்றியும் விவசாய தொழிலாளிகளைப்பற்றியும் அக்கறை இல்லாத அரசை உணரவைக்கவும் கடைப்பிடிக்கப்படும் கொள்கையில் மாற்றம் கொண்டுவரவும் 2011ம் ஆண்டில் நடைபெற்ற ஒற்றுமையான போராட்டங்கள் 2012லும் தொடரவேண்டும்.
மக்களுக்காக, மக்கள் நலனுக்காக, கண்ணியமான வாழ்க்கைத்தரம் கிடைப்பதற்காக எதிர்கால சந்ததியினருக்கு அனைத்து உரிமைகளும் பெறுவதற்கும் அசுர பலத்துடன் இவ்வேலை நிறுத்தம் நடைபெறவேண்டும்! நடைபெறும்!
மாலதி சிட்டிபாபு
அமைப்பாளர்
உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு, தமிழ்நாடு
 
Related Posts Plugin for WordPress, Blogger...