உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Saturday, February 04, 2012

டிவிட்டரின் தணிக்கை முடிவும் இணையப் போராட்டமும்!

டிவிட்டர் இதுவரை போராட்டங்களுக்கு கைகொடுத்திருக்கிறதே தவிர போராட்டத்துக்கு இலக்கானதில்லை. ஆனால், இப்போது இணையவாசிகளும், டிவிட்டர் பயனாளிகளும் டிவிட்டருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

போராட்டத்துக்கும் உலகலாவிய எதிர்ப்புக்கும் அடையாளமான ஹாஷ்டேக் (#) என்னும் குறிப்பிட்ட சொற்களோடு குறும்பதிவுகள் வெளியிடப்படுவது போல டிவிட்டருக்கு எதிராகவே பலவித ஹாஷ்டேகுகளோடு குறும்பதிவுகள் குவிந்து கொண்டிருக்கின்ற‌ன.

தீவிர டிவிட்டர் ஆதர‌வாளர்களும் மனித உரிமை ஆர்வலர்களும் 'நீயுமா டிவிட்டர்' என நம்ப முடியாத திகைப்போடு கேட்கின்றனர். வலைப்பதிவாளர்களும், இணைய நிபுணர்களும் டிவிட்டருக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

டிவிட்டர் மீதான இந்த ஆவேசத்துக்கும் அதிருபதிக்கும் காரணம், 'தணிக்கைக்கு தயார்' என்னும் டிவிட்டரின் முடிவுதான். 

கடந்த சில தினங்களுக்கு முன் டிவிட்டர் தனது அதிகாரபூர்வ வலைப்பதிவில் தனது புதிய தணிக்கை கொள்கை தொடர்பான முடிவை வெளியிட்டது. 

இந்த அறிவிப்பை இந்தியாவில் 'டிவிட்டர் தணிக்கைக்கு தயார்' என்பது போன்ற தலைப்பில் செய்திகள் வெளியிடப்பட்டாலும், டிவிட்டரின் முடிவு இந்தியாவை மையமாக கொண்டது அல்ல; உண்மையில் எந்த ஒரு குறிப்பிட்ட நாட்டையும் மையமாக கொண்டது அல்ல. டிவிட்டரின் முடிவு மிகவும் பொதுவானது.

டிவிட்டர் உலகலாவிய சேவை என்றபோதிலும் குறிப்பிட்ட நாட்டுக்கு ஏற்ப முடிவுகளை தணிக்கை செய்யும் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டிருப்பதாகவும், அதன் பயனாக ஏதாவது ஒரு நாட்டில் தணிக்கை அவசியமானால், அங்கு தணிக்கை செய்யப்பட முடியும் என டிவிட்டர் அறிவித்தது. எனவே, ஏதேனும் நாட்டில் குறிப்பிட்ட ஆட்சேபகரமான குறும்பதிவு நீக்கப்படகோரினால், அதை நீக்க முடியும் என டிவிட்டர் தெரிவித்தது.

டிவிட்டரின் தணிக்கை முடிவு எதிர்பார்க்கக் கூடியது போலவே இணைய உலகில் திகைப்பையும், அதன் விளைவாக எதிர்ப்பையும் விமர்சனைத்தையும் உண்டாக்கியது.

டிவிட்டரின் இந்த முடிவுக்கான காரணம் என்ன? இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் என்ன? என்றெல்லாம் இணைய நிபுணர்கள் விவாதித்து கொண்டிருக்க, டிவிட்டரின் சுதந்திரமான தனமையில் நம்பிக்கை கொண்ட குறும்பதிவாளர்கள், தங்கள் எதிர்ப்பை குறும்பதிவுகளாகவே காட்டத் துவங்கிவிட்டனர். அதுவும் டிவிட்டர் மொழியிலேயே வெளிப்படுத்தினர். டிவிட்டருக்கு கண்டனம் தெரிவிக்கும் பதிவுகள் டிவிட்டர் பிளாக் அவுட் (#twitterblackout) என்னும் ஹாஷ்டேகோடு ஆவேச ஆறாக பாய்ந்தன. டிவிட்டரை புறக்கணிப்போம் என்னும் கோரிக்கையும் குறும்பதிவாக முன்வைக்கப்பட்டு அதற்கான ஆதரவும் குவிந்தன.

சில நாட்களுக்கு முன்னர் தான் அமெரிக்காவில் சோபா (SOPA) கறுப்புச் சட்டத்துக்கு எதிராக இதேபோன்ற போராட்டக் குரல் ஒலித்த போது, அதற்கு ஆதரவு தெரிவிக்க பலரும் டிவிட்டரை பயன்ப‌டுத்தினர். பலர் தங்கள் டிவிட்டர் பின்னணியை மாற்றி கறுப்புக் கொடி காட்டினர்.

ஆனால், இதேபோன்ற போராட்டம் டிவிட்டருக்கு எதிராகவே நடத்தப்படும் என்பதை டிவிட்டர் எதிர்பார்த்திருக்குமா என்று தெரியவில்லை. டிவிட்டர் பயனாளிகளும் நிச்சயம் இந்த நிலையை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

டிவிட்டரை சர்வாதிகாரத்துக்கு எதிரான ஆயுதமாக கருதியவர்கள் இந்த தணிக்கை முடிவால் ஏமாற்றத்துக்கும் அதிர்ச்சிக்கும் ஆளானார்கள். 'டிவிட்டர் துரோகம் செய்துவிட்டது,' என எகிப்து வலைப்பதிவாளர் ஒருவர் வேதனையோடு தெரிவித்தார். பிரபல ஃபோர்ப்ஸ் பத்திரிகை, 'டிவிட்டர் முடிவு தற்கொலைக்கு ச‌மமானது' என எழுதியது.

டிவிட்டரின் தணிகை முடிவு கடுமையாக விமர்சிக்கப்பட்டதோடு திரும்ப பெற வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.

இந்தத் தார்மீக கோபம் புரிந்துகொள்ளகூடியதே. காரண‌ம், டிவிட்டரின் முடிவு இணையத்தில் சுதந்திரத்தின் கை ஓங்க வேண்டுமா அல்லது தணிக்கையின் ஆதிக்கம் நடக்க வேண்டுமா என்பதை தீர்மானிக்க கூடியதாக அமைந்திருக்கிறது.

தணிக்கையின் ராஜ்யம் தலைவிரித்தாட டிவிட்டரின் முடிவு ஒரு மோசமான தொடக்கப் புள்ளியாகிவிடலாம் என்று அஞ்சப்படுகிறது.

என்ன இருந்தாலும் டிவிட்டர் ஒரு வர்த்த‌க நிறுவனம். அதன் முடிவுக்கும் இத்த‌னை முக்கியத்துவம் தேவையா என கேட்கலாம். அதிலும் இந்தியாவிலேயே கூகுள் பள்ஸ், பேஸ்புக் போன்ற சமூக வலைப்பின்னல் தளங்களில் வெளியாகும் கருத்துக்களை தணிக்கை செய்ய வேண்டும் என்று ஒருகருத்து சிலரால் முன் வைக்கப்படும்போது, டிவிட்டர் அறிவிப்பு இயல்பானதாக தோன்றலாம்.

ஆனால், டிவிட்டரின் இந்த முடிவு இணைய உலகில் எதிர்பாராத பாதிப்பை ஏற்படுத்தலாம். இணைய உலகில் மட்டுமே பல நாடுகளில் பெரும்பாதிப்பை உண்டாக்கலாம்.

துனீசியாவில் துவங்கி எகிப்து உள்ளிட்ட அரபு நாடுகளில் வெடித்த மக்கள் புரட்சிக்கும் டிவிட்டர் முக்கிய உந்து சக்தியாக இருந்ததை அத்த‌னை எளிதில் மறந்துவிட முடியுமா? அதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் ஈரானில் தேர்தலின்போது முறைகேடு நடைபெற்றதை டிவிட்டர் பதிவுகளே உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டியதை மறந்து விட முடியுமா? 

ஈராக் மக்களின் இந்த போராட்டத்தின்போது அவர்களுக்கான ஒரே ஆயுதமாக விளங்கும் டிவிட்டர் முடங்கிவிடக்கூடாது என்பதற்காக அமெரிக்க அரசே தலையிட்டு டிவிட்டரின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை தள்ளிவைத்து, 'ஈரானில் ஜனநாயக‌ எதிர்ப்பு குரல் தொடர்ந்து ஒலிக்கட்டும்' எனக் கேட்டுக்கொண்டதை தான் மறந்து விட முடியுமா?

பொதுவாக மக்கள் போராட்டம் வெடிக்கும்போது சர்வாதிகார அரசுகள் செய்தி வெளியீட்டு சாதனங்களை கடும் தணிக்கைக்கு உட்படுத்தி போராட்டத்தின் குரல் வலையை நெரிக்கின்றன. ஆனால், அரசாங்க தணிக்கையை மீறி எதிர்ப்பு கருத்துக்களை வெளியிடவும் ஆதரவை ஒன்று திரட்டவும் கைகொடுக்கிறது என்ப‌து தானே பலரையும் 'டிவிட்டர்' புகழ் பாட வைக்கிற‌து.

ஈரான், எகிப்து, லிபியா போன்ற கருத்து சுதந்திரம் பறிக்கபடும் ஒடுக்கு முறை தேசங்களில் டிவிட்டர் மாபெரும் மக்கள் ஆயுதமாக போற்றப்படுகிறது.

போராட்டத்துக்கு உதவும் ஆயுதமாக டிவிட்டர் திகழ்வது பற்றியும், டிவிட்டர் உண்டாக்கிய புரட்சி பற்றியும் ஆய்வு செய்யப்பட்டு புத்தகங்கள் எழுதப்பட்டு வரும் நிலையில், டிவிட்டரே தணிக்கைக்கு தயார் என்று அறிவித்தது மாபெரும் சோகம் என்று பலரும் கருதுவதில் காரணம் இல்லாமல் இல்லை.

டிவிட்டரின் தணிக்கையால் என்ன எல்லாம நடக்கலாம் என நினைத்து பார்த்தால் இது புரியும்.

கருத்து சுதந்திரம் என்பது உலகம் முழுவதும் ஒரே மாதிரியானது இல்லை. நாட்டுக்கு நாட்டுக்கு மாறுபடுவது என்பதால், ஏதாவது ஒரு நாட்டில் ஒரு குறும்பதிவு அவதூறானதாக கருதப்பட்டால், அதனை தணிக்கை செய்வோம் என டிவிட்டர் கூறுகிறது.

ஜனநாயக அரசு இல்லாத நாடுகளில், அரசுக்கு எதிரான எந்த கருத்தையும் அவதூறானது எனக் கோரி நீக்க செய்யலாம். விமர்ச‌ன ரீதியிலான பதிவுகளைக்கூட ஆட்சேபத்துக்கு உரியவை என நீக்கி செய்யலாம். இத்தகைய தணிக்கை அமலில் இருந்திருந்தால், எகிப்திலும் துனீசியாவும் புரட்சியே வெடித்திருக்காது.

டிவிட்டரின் ஆதார பலமே அது கட்டுப்பாடற்ற வெளியீட்டு சாதனமாக இருக்கிறது என்பதுதான். அடக்குமுறை அரசுகளின் கண்ணில் மண்ணை தூவி டிவிட்டரில் குறும்பதிவுகளாக எதிர்ப்பு கருத்துக்களை பதிவு செய்வது சுலபமானது. டிவிட்டர் ஹாஷ்டேக் மூலம் போராட்டங்களை நெறிப்படுத்தலாம். டிவிட்டர் - போராட்டத்தின் ஆயுதம் என்ப‌தில் எந்த சந்தேகமும் இல்லை.

இயல்புநிலை இப்படி இருக்க, டிவிட்டர் ஏன் இப்படி ஒரு விபரீத முடிவை அறிவிக்க வேண்டும்? எல்லாம் வளர்ச்சியின் நிர்பந்தம் என்கின்றனர். டிவிட்டர் உலகளாவிய விரிவாகத்துக்கு திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக சீனாவில் நுழையவும் விரும்புகிறது.
தற்போதைய வடிவில் சீனாவில் நுழைய முடியாது என்பதால், டிவிட்டர் சீன சந்தையை மனதில் கொண்டு தணிக்கைக்கு தயாரானதாக சொல்லப்படுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன் சீனாவில் கூகுள் தனது தேடல் முடிவுகளை தணிக்கை செய்து வெளியிட்டதையும், பின்னர் அதற்கு உடன்படாமல் அங்கிருந்து வெளியேறியதையும் இங்கே நினைத்துப் பார்க்க வேண்டும்.

பரந்து விரிந்த சீனச் சந்தை டிவிட்டர் வளர்ச்சிக்கு முக்கியமானது. காரணம், டிவிட்டர் ஒரு வெற்றிகரமான தோல்வி நிறுவனம். அதாவது, டிவிட்டர் மிகப்பெரிய நிறுவனமாக வளர்ந்து விட்டதே தவிர, அதனிடம் வருவாய்க்கான உருப்படியான‌ வழியில்லை. எனவே தொடர்ந்து வளர்ந்துகொண்டே இருப்பது தான் அதற்கு உள்ள ஒரே வழி.

அதனால்தான் டிவிட்டர் சீனா உள்ளிட்ட நாடுகளில் கவனம் செலுத்துகிறது. தவிர, சீனா போன்ற நாடுகளில் செயல்ப‌டும்போது விவகார‌மான குறும்பதிவு காரணமாக அங்குள்ள டிவிட்டர் ஊழியர்கள் கைது செய்யப்படலாம். அவர்களை காப்பாற்றவும் டிவிட்டருக்கு சுய தணிக்கை அவ‌சிய‌மாகிறது என்கின்றனர்.

எல்லாம் சரி தான். ஆனால், டிவிட்டர் வளர்ச்சிக்கான விலை கருத்து சுதந்திரமா என்பதே இணைய உலகின் கேள்வி!
Related Posts Plugin for WordPress, Blogger...