உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Wednesday, February 01, 2012

மின் கட்டண உயர்வுக்கு, முதல் கூட்டத்திலேயே எழுந்த மோதல் ?


தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் சார்பில் மின்கட்டணத்தை மாற்றியமைத்தல் தொடர்பான மக்கள் கருத்து கேட்பு கூட்டத்தில், விவசாயிகள் சங்கத்தினருக்கும் குடியிருப்போர் சங்கத்தினருக்கும் மோதல் ஏற்பட்டது.
 மின்வாரியத்தை செயல்படாத வாரியம், மின்வாரிய ஊழியர்கள் லஞ்ச பேர்வழிகள், என்று பலர் பேசியதால் அரங்கத்தில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. ஆணைய உறுப்பினர்களையே எதிர்த்து ‘அதிகார ஆணவமா’ என்று சிலர் பேசியதால் உறுப்பினர்கள் அவர்களை கண்டித்தனர்.
தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் சார்பில் மின் கட்டணத்தை மாற்றியமைத்தல் தொடர்பாக மக்கள் கருத்து கேட்பு கூட்டம் ராஜா அண்ணாமலை மன்றத்தில் நேற்று நடந்தது. ஒழுங்கு முறை ஆணைய உறுப்பினர்கள் நாகல்சாமி, வேணுகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

செயலாளர் குணசேகரன், நுகர்வோரை பேச அழைத்தார். விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், வணிகர் சங்கங்களின் பிரதிநிதிகள், தொழிற்சங்கங்கள், குடியிருப்போர் நல சங்கங்கள், நுகர்வோர் அமைப்புகள், பொதுமக்கள் என்று மொத்தம் 84 பேர் தங்களது கருத்துகளை தெரிவித்தனர். உறுப்பினர்கள் சிலர்  பேசிய விவரம்: கலைவாணன்: விசைத்தறி தொழிலுக்கு மின் கட்டண உயர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். ரவீந்திரன்: மின் இழப்பு மின் திருட்டை தடுக்க வேண்டும்.

சிவக்குமார்: அரசியல் கட்சியினர் மற்றும் கோவில் விழாக்களில் கொக்கி போட்டு மின்சாரம் எடுக்கப்படுகிறது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வெங்கடகிருஷ்ணன்: விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் என்று கொச்சைப்படுத்தாதே. உற்பத்தி சலுகை என்று கூற வேண்டும். விவசாயம் செய்யாவிட்டால் கரன்சியையா கரைத்துக்குடிப்பீர்கள். கிருஷ்ணாபுரம் குடியிருப்போர் நல சங்க பொதுச்செயலாளர் கணபதி : விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க கூடாது. அதனால் பெரும் இழப்பு ஏற்படுகிறது.

இவ்வாறு அவர் பேசியதும் அரங்கில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. வேட்டவலம் மணிகண்டன் மற்றும் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் ஒட்டுமொத்தமாக எழுந்து நின்று கணபதியை வசைபாடினர். ‘ உனக்கு வேண்டியதை கேள். எங்களுக்கு கொடுப்பதை பற்றி பேச நீ யார்’ என்று எகிறினர்.
அதற்கு கணபதியும் சமமாக பேசியதால் அரங்கில் பதட்டம் ஏற்பட்டது. ஒழுங்கு முறை ஆணைய உறுப்பினர்கள் அவர்களை சமாதானப்படுத்த முயன்றனர். முடியவில்லை. அந்த நேரத்தில் ஆபாச வார்த்தைகளும் அரங்கில் விழத்தொடங்கின. இதையடுத்து போலீசார் அரங்கில் நுழைந்து அனைவரையும் சமாதானப்படுத்தினர்.
தொடர்ந்து காந்தி: தனியாரிடமிருந்து மின்சாரத்தை கொள்முதல் செய்வதால்தான் இழப்பு ஏற்பட்டது.

அங்கப்பன்: ஒழுங்கு முறை ஆணையம் ஒழுங்காக செயல்படவில்லை. அரசு வழங்க வேண்டிய மான்ய தொகையை ஆணையம் கேட்டுப்பெற தவறிவிட்டது.
செல்வராஜ்: ஒழுங்கு முறை ஆணையத்தில் முறைகேடுகள் அதிகரித்து விட்டன. மின் திருட்டு நடக்க அலுவலர்கள் உடந்தையாக உள்ளனர்.
பாலசுப்ரமணியன்: வெளிநாட்டு கம்பெனிகளுக்கு சலுகை விலையில் மின்சாரம். ஏழைகளுக்கு கட்டண உயர்வா?

ராகுல் ஜெயின்: தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு கட்டண உயர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றார். அப்போது குறுக்கிட்ட பலரும், அம்பானிக்கு சலுகை வேண்டுமா? என்று எதிர்ப்பு குரல் எழுப்பினர். இதனால் அவர் பேச்சை நிறுத்திக் கொண்டார். பாலசுப்ரமணியன்: அதிகாரிகள் தங்களது கடமையை ஒழுங்காக செய்யவில்லை. கண்காணிக்கவும் ஆள் இல்லை. எல்லா நிலையிலும் ஊழல் மலிந்து விட்டது. அதிகாரிகள் தனியாருடன் சேர்ந்து கொள்ளை லாபம் அடிக்கின்றனர்.

வாரிய இழப்பீடுகளை அந்தந்த அதிகாரிகளிடமே வசூலிக்க வேண்டும். சுப்ரமணியன்: கருத்து கேட்பு கூட்டமே ஒரு நாடகம். ஆணையத்துக்கு தலைவரே இல்லை. பற்றாக்குறைக்கு காரணம் அரசுகள்தான். உற்பத்தியை அதிகரிக்க அரசுகள் எதுவுமே செய்யவில்லை. வாராக்கடன்கள் மின்வாரியத்துக்கு உள்ளது. இது எப்படி ஏற்பட்டது. இவ்வாறு அவர் பேசியபோது குறுக்கிட்ட ஆணைய உறுப்பினர்கள. வாய் பேச்சில் பேசாதீர்கள். எதுவாக இருந்தாலும் ஆதாரத்தோடு பேசுங்கள். நாடகம் என்றெல்லாம் பேசக்கூடாது. தலைவர் இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன? கூட்டம் நடக்கிறதே. பேச வேண்டியதை பேசுங்கள் என்று கண்டித்தார்.

அதேபோலவே பேசிய நுகர்வோர்கள் பலரும் மின்வாரிய இழப்பு, உற்பத்தி இல்லாத நிலை, ஊழியர்களின் அலட்சியபோக்கு, தச்சுத்தொழிலுக்கு கட்டணவிலக்கு, டைலர் கடைகளுக்கு கட்டண விலக்கு, கருத்து கேட்பு கூட்டங் களை விடுமுறைநாட்களில் பொது இடங்களில்தான் நடத்த வேண்டும். ஐ.டி நிறுவனங்களுக்கு மின் கட்டணத்தில் சலுகை காட்டக்கூடாது. ஏழைக்கு விலக்கு, பணக்காரர்களுக்கு கூடுதல் கட்டணம், போன்ற கருத்துகளை தெரிவித்தனர்.

திருமுருகன் என்பவர் பேசும்போது 1994 வரை மின்வாரியம் லாபத்தில் இயங்கியது நஷ்டமடைய அதிகாரிகள்தான் காரணம். அயோக்கியத்தனம் செய்கின்றனர் என்று பேசி விட்டு ஆணையத்தின் செயல்பாடுகளை விமர்சித்தார். குறுக்கிட்ட ஆணைய உறுப்பினர்கள், கமிஷனை பற்றி பேசுவது சரியல்ல. நாங்கள் ஒன்றும் இந்த வேலையை கேட்டு வாங்கி வரவில்லை. விட்டுவிட்டுபோய்க்கொண்டே இருப்போம். சரியாக பேசுங்கள் என்று குரலை உயர்த்தி எச்சரித்தனர். இதைக்கண்ட நுகர்வோர் சங்கத்தினர் அதிகார ஆணவத்தில் பேசாதீர்கள் என்று ஆணைய உறுப்பினர்களுக்கு எதிராக குரல் எழுப்பினர். இதனால் சிறிது நேரம் பதட்டமாக காணப்பட்டது.

நுகர்வோர்களின் பல்வேறு திட்டுகள், ஆலோசனைகளுக்குப்பிறகு, இந்த கேள்விகளுக்கு மின் பகிர்மானக்கழக தலைவர் ராஜீவ் ரஞ்சன் பதிலளித்து பேசியதாவது:
மின் தேவை அதிகரித்தாலும், நம்மிடம் உற்பத்தி குறைந்ததாலும் தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்கப்படுகிறது. நிலக்கரி விலை உயர்வு, பழமையான மின் உற்பத்தி நிலையங்கள், ரூபாய் மதிப்பு சரிவு, போன்றவற்றால் மின்வாரியத் துக்கு இழப்பு ஏற்பட்டது. தற்போது 2012,13 ம் ஆண்டில் 4 ஆயிரம் மெகா வாட் உற்பத்தி செய்யும் மின்திட்டம் செயல்பட உள்ளது. 01.08.2012 முதல் மின்வெட்டே இருக்காது. மின் திருட்டை தடுக்க 18 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

முன்னாள் ராணுவத்தினரை கொண்ட 40 பறக்கும்படைகள் அமைக்கப் பட்டுள்ளன. வருங்காலத்தில் வாரியத்தின் சேவை சிறப்பாக இருக்கும். ஐ.டி நிறுவனங்களுக்கு சலுகை அளிக்கப்படவில்லை. ஆனால் 24 மணி நேரம் மின்சப்ளை உண்டு. காரணம் அன்னிய செலாவணி, வேலைவாய்ப்பு கிடைக்கிறது.

லஞ்சம் வாங்குவோர் மீது நிர்வாகமே நடவடிக்கை எடுக்க முடியாது. பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும். லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் தெரிவிக்க முன்வரவேண்டும்.
இவ்வாறு அவர் பதிலளித்தார். இதையடுத்து சில கேள்விகள் நுகர்வோர் தரப்பிலிருந்து எழுந்தது. நாசூக்காக அவற்றை மறுத்த ராஜீவ்ரஞ்சன், அங்கிருந்து நகர்ந்தார். உறுப்பினர்களும், செயலாளரும் எழுந்து கூட்ட கருத்துகள் குறித்து அரசிடம் தெரிவிக்கப்படும் என்று கூறி கூட்டத்தை நிறைவு செய்தனர். ஆணைய கூட்டத்துக்கு வந்த பிரதிநிதிகளோ, வெறும் கண்துடைப்புக்கூட்டமாக, சடங்காக, இது நடத்தப்பட்டது கண்டிக்கத்தக்கது என்று கூறியபடி ஆணையத்தை விமர்சித்தவாறு வெளியேறினர்.

மதுரை திருச்சியில்
அடுத்த கூட்டம்

மின் கட்டணத்தை மாற்றியமைத்தல் தொடர்பான மக்கள் கருத்து கேட்புக்கூட்டங்கள் திருச்சி மற்றும் மதுரை நகரங்களில் நடத்தப்படுகிறது. இதற்கான தேதி இன்னும் முடிவாகவில்லை. மக்களிடமிருந்து கோரிக்கைகள், புகார்கள், ஆலோசனைகள் தொடர்பான மனுக்களை ஆணையம் வரவேற்றுள்ளது.
சென்னையில் நேற்று காலை 10.30 மணிக்கு துவங்கிய கருத்து கேட்பு கூட்டம் மாலை 6.45 வரை நடந்தது.
Related Posts Plugin for WordPress, Blogger...