உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Friday, April 13, 2012

திருப்பூரின் எதிர்காலம் என்ன ஆகும்?

திருப்பூரின் எதிர்காலம் என்ன ஆகும்?


டாலர் சிட்டி என்று புகழப்படும் பின்னலாடை ஏற்றுமதி நகரமான திருப்பூரின் எதிர்காலம் என்ன ஆகும் என்று பனியன் தொழில் துறையினர் மட்டுமல்லாது திருப்பூரின் வளர்ச்சியில் அக்கறை கொண்ட பல தரப்பினரும் கேள்வி கேட்கத் தொடங்கியுள்ளனர். உலகமய காலகட்டத்தில் வளர்ச்சியின் அடையாளமாக முன்வைக்கப்பட்ட திருப்பூர், இன்று அதன் எதிர்காலம் என்ன ஆகுமோ என்ற கேள்விக்குள் தள்ளப்பட்டு விட்டது, இதுவே தற்போதைய வளர்ச்சியின் நிலையற்ற தன்மையை தெளிவாக உணர்த்துவதாக இருக்கிறது.திருப்பூரில் 1980களின் பிற்பகுதியில் தொடங்கிய பின்னலாடை ஏற்றுமதி, வளர்ச்சிப் பாதையில் தான் சென்று கொண்டிருந்தது. ஆண்டுக்கு சராசரியாக 20 சதவிகிதத்தைத் தாண்டிய பாய்ச்சல் வேக ஏற்றுமதி வளர்ச்சியை இந்நகரம் பதிவு செய்தது. ஆனால் இந்த ஒளிமயமான வளர்ச்சி, 2008ம் ஆண்டு திடீரென இருள் சூழ்ந்த வீழ்ச்சியாக மாறிவிட்டது. (பார்க்க அட்டவணை.)


அட்டவணைஆண்டு - (ஏற்றுமதி மதிப்பு ரூபாய் கோடியில்)1991 - 429.481992 - 774.931993 - 1162.431994 - 1318.001995 - 1591.831996 - 1897.001997 - 2255.001998 - 2619.001999 - 3067.00 2000 - 3581.002001 - 3528.002002 - 3250.002003 - 3896.002004 - 4468.752005 - 6500.002006 - 8500.002007 - 11000.002008 - 9950.002009 - 9500.002010 - 12500.002011 - 12500.002012 - 12300.00
----------------------------------------------------

2008ம் ஆண்டுக்கு முன்பு வரை ஒவ்வோர் ஆண்டும் ஆயிரம் கோடி, இரண்டாயிரம் கோடி என ஏற்றுமதி அளவு அதிகரித்து வந்தது. 2007ம் ஆண்டு 11 ஆயிரம் கோடி ரூபாயை எட்டியது. ஆனால் 2008ம் ஆண்டு திடீரென இந்த அளவு ரூ.9950 கோடியாக சரிந்தது. அதாவது முந்தைய ஆண்டை ஒப்பிட ரூ. ஆயிரத்து 50 கோடி குறைந்தது. அதற்கு அடுத்த ஆண்டு மேலும் ரூ.450 கோடி குறைந்தது. அதன் பிறகு 2010ம் ஆண்டு முதல் கடந்த மூன்று ஆண்டுகளில் ஏறத்தாழ ஒரே அளவில் தான் சுமார் ரூ. 12 ஆயிரத்தில் இருந்து ரூ.12 ஆயிரத்து 500 கோடிக்கு இடையில் தள்ளாடிக் கொண்டிருக்கிறது.2008ம் ஆண்டு வீழ்ச்சி அடைந்ததற்கு காரணம் வெளிப்படையானது. பிரதானமாக சுமார் 90 சதவிகிதம் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் சந்தையைத்தான் திருப்பூர் ஏற்றுமதி சார்ந்துள்ளது. 2007ம் ஆண்டு பிற்பகுதியில் அமெரிக்க டாலர் மதிப்பு சரிந்தது, வீட்டு அடமானக் கடன் பிரச்சனையைத் தொடர்ந்து அமெரிக்காவின் முதன்மையான நிதி நிறுவனங்கள் திவாலானதும், அதன் தொடர்ச்சியாக அமெரிக்க நிதிச் சந்தையில் ஏற்பட்ட வீழ்ச்சியும் அமெரிக்க நுகர்வோர் சந்தையைத் தள்ளாடச் செய்தன. அமெரிக்க மக்களின் வாங்கும் சக்தி கணிசமாக சரிவடைந்தது. எனவே அதைச் சார்ந்திருந்த திருப்பூரின் ஏற்றுமதி வீழ்ச்சி அடைந்தது.அதன் பிறகு திருப்பூர் ஏற்றுமதி 2010 - 11 காலத்தில் இருந்து சற்று மேம்பட்டிருப்பதாக புள்ளிவிபரங்கள் காட்டினாலும் அது உண்மையான வளர்ச்சி இல்லை. ஏனென்றால் ஆரம்பத்தில் பாதிப்பைச் சந்திக்காத ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் சந்தையும்கூட தற்போது கடும் பாதிப்பைச் சந்தித்து வருகின்றன. அதேசமயம் உலகளாவிய அளவில் பஞ்சு, நூல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. குறிப்பாக மத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பருத்தி ஏற்றுமதிக்கு அனுமதி கொடுத்ததும், நூல் விலையைக் கட்டுப்படுத்த எவ்வித கண்காணிப்பு ஏற்பாடு செய்யாததும் சேர்ந்து தாறுமாறாக நூல் விலையை உயர்த்தியது. நூறு சதவிகிதத்தைத் தாண்டி நூல் விலை உயர்ந்தது. இத்தோடு உலகளாவிய அளவில் பணவீக்கம் அதிகரித்தது. குறிப்பாக உலகில் வேறெந்த நாட்டையும் விட இந்தியாவில் பணவீக்கம் இரட்டை இலக்கத்தில் அதிகரித்தது. இது தவிர சாயத் தொழில் நெருக்கடி, மின்வெட்டு, எரிபொருள் விலையேற்றம் உள்ளிட்ட இதர காரணங்களாலும் திருப்பூர் பின்னலாடைத் தொழில் பாதிப்பைச் சந்தித்து வருகிறது. இதனால் பின்னலாடை உற்பத்திச் செலவு கணிசமாக அதிகரித்தது. இவ்வாறு ஒரு பக்கம் உற்பத்திச் செலவு அதிகரித்த நிலையில், அதன் உடன் விளைவாக, மறுபக்கம் பணத்தின் உண்மை மதிப்பு குறைந்தது. இந்த அடிப்படையில் கணக்கிட்டால் திருப்பூரின் ஏற்றுமதி அளவு ரூ.12 ஆயிரம் கோடியைத் தாண்டினாலும், உண்மையான மதிப்பு அடிப்படையில் ஏற்றுமதி வீழ்ச்சி அடைந்திருக்கிறது. அதையே உத்தேசமாக இப்படியும் சொல்லலாம். ஆண்டுக்கு சராசரியாக 20 சதவிகித வளர்ச்சி என்ற மதிப்பீட்டின் அடிப்படையில்  ஐந்தாண்டுகள் கடந்து இந்த (2012ம்) ஆண்டு திருப்பூரின் ஏற்றுமதி தோராயமாக ரூ.23 ஆயிரம் கோடியைத் தாண்டியிருக்க வேண்டும். ஆனால் தற்போதைய ஏற்றுமதி ரூ.12,300 கோடியாகப் பதிவாகியிருக்கிறது, என்றால் தோராயமாக ரூ.10 ஆயிரம் கோடி ஏற்றுமதி வீழ்ந்திருக்கிறது! அதுமட்டுமல்ல, இந்த ரூ.12 ஆயிரத்து 300 கோடி என்பதும் பணவீக்கத்தின் அடிப்படையில் கணக்கிடும்போது, உண்மை மதிப்பு இதைவிடவும் சுமார் ரூ.ஆயிரம் கோடியாவது குறைவாகத்தான் இருக்கும். இப்படிச் சொல்வதன் அர்த்தம் என்னவென்றால் கடந்த ஐந்தாண்டு காலத்தில் திருப்பூரின் ஏற்றுமதி வளர்ச்சி என்பது எதிர்மறை விகிதத்தில் (Negative Growth) தான் இருந்திருக்கிறது. ஆகவே தான் கடந்த மூன்றாண்டு காலத்தில் திருப்பூரில் இருந்து சுமார் 80 ஆயிரம் தொழிலாளர்கள் வெளியேறிவிட்டனர் என்று ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் ஏ.சக்திவேல் கூறுகிறார். திருப்பூரில் தற்போதைய நிலவரப்படி 40 சதவிகிதம் அளவுக்கு ஏற்றுமதி பின்னலாடை தொழிலகங்கள் செயல்படவில்லை. குறிப்பாக சிறு, குறு உற்பத்தியாளர்கள், ஜாப் ஒர்க் செய்யக்கூடிய நிறுவனத்தார் மிக, மிகக் கடுமையான பாதிப்பைச் சந்தித்திருக்கின்றனர். ஏறத்தாழ ஒரு லட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்து, நாற்பது சதவிகிதம் சிறு உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டிருப்பது திருப்பூரைப் போன்ற நெருக்கமான ஒரு தொழில் மையத்தைப் பொறுத்தவரை சாதாரண விசயம் அல்ல. எனினும் தொழில்ரீதியான இந்த சரிவு மிகப்பெரிய சமூக நெருக்கடியாகவோ, அரசியல் பிரச்சனையாகவோ ஏன் வெளிப்படவில்லை என்பது விரிவாக ஆய்வு செய்து பார்க்க வேண்டிய பிரச்சனையாகும்.ஆக, இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் சொல்லப்பட்டதைப் போல் உலகமய காலத்தில் வளர்ச்சியின் அடையாளமாக முன்வைக்கப்பட்ட திருப்பூர் இன்று எப்படி ஒரு முட்டுச் சந்தில் வந்து நிற்கிறது என்பதைப் பார்க்கிறோம். புதிய பொருளாதார கொள்கை தொடங்கப்பட்ட 1991 ஆரம்பத்தில் இருந்தே இக்கொள்கையை உறுதியாக விமர்சித்து வந்திருக்கக்கூடிய இடதுசாரிகள் மட்டுமல்ல, தாராளமயக் கொள்கையை வளர்ச்சியின் தூதுவனாக, வரப்பிரசாதமாக தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடியவர்களும் தற்போது இந்த "வளர்ச்சியை" கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.ஆனால் ஆளும் வர்க்கத்தாரும் சரி, அன்று தாராளமயக் கொள்கையைக் கொண்டாடிய தொழில் துறை பிரதிநிதிகளும் சரி இன்றைய இந்த நெருக்கடிக்கு தாராளமயக் கொள்கை தான் காரணம் என்பதை வெளிப்படையாகச் சொல்ல மறுக்கின்றனர். அவர்கள் அவ்வாறு கள்ள மௌனம் சாதிப்பதற்கு காரணம் இல்லாமல் இல்லை. மிகப்பெரும் நெருக்கடியைச் சந்திக்கும் இந்த காலத்தில் தான் பின்னலாடைத் துறையில் மேலடுக்கில் (கிரீமி லேயர்) இருக்கக்கூடிய மிக, மிகச் சிறு குழுவினர் கூடுதல் வளர்ச்சியை எட்டியிருக்கிறார்கள் என்பதும் உண்மை. எனவே அவர்கள் இந்த சமூகப் பொருளாதார நெருக்கடியைப் பொருட்படுத்தக் கூடியவர்களாக இல்லை. அவர்கள் ஆளும் வர்க்கத்தாரோடு நெருங்கிய பிணைப்பு வைத்துக் கொண்டு தங்கள் லாபத்தை எப்படிப் பெருக்குவது என்று சிந்தித்துக் கொண்டிருக்கின்றனர்.அதேசயம் தாராளமயக் கொள்கையின் கொடுங்கரத்தால் இறுக கழுத்து நெரிக்கப்பட்ட சிறு, குறு உற்பத்தியாளர்கள் தங்களது இந்த நிலைக்கு தாராளமயக் கொள்கைதான் காரணம் என்பதை உணர வேண்டும். ஆனால் கொள்கை காரணத்தை உணராதவர்களாக, நூல் விலை உயர்வு, மின்வெட்டு என இந்த அல்லது அந்த காரணத்தை தனித்தனியாகச் சொல்லிக் கொண்டு பிரிந்திருக்கும் வரை அவர்களால் ஒன்றுமே செய்ய முடியாது.திருப்பூரின் ஏற்றுமதி அதிகரிப்பதில் ஆதாரமான பங்கு செலுத்திய உழைக்கும் மக்கள் ஒரு பகுதியினர் வெளியேறிவிட்டார்கள் என்றால், தற்போது இங்கே இருந்து உழைத்து வரக்கூடிய உழைப்பாளிகள் வேலை நேரம் குறைந்து உண்மை வருமானம் குறைவதை சந்தித்து வருகின்றனர். ஒப்பந்தத் தொழிலாளர்களாக, விடுதி தொழிலாளர்களாக கடும் உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாவதோடு, இன்னும் கடும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டு முறைசாராக் கூலிகளாக மாற்றப்படக் கூடிய அச்சுறுத்தலும் இருக்கிறது.திருப்பூர் அதன் உச்சத்தை எட்டிவிட்டதாக, அண்மையில் ஒரு சமயம் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் ஏ.சக்திவேல் கூறினார். அது உண்மையானால் பின்னலாடைத் தலைநகரமான திருப்பூரின் எதிர்காலம் என்ன ஆகும் என்பது எஞ்சி நிற்கும் கேள்வியாகும். தாராளமயக் கொள்கைக்கு எதிரான போராட்டத்தின் மூலம்தான் உழைக்கும் மக்களும், சிறு, குறு உற்பத்தியாளர்களும் இதற்கான விடையைத் தேட முடியும். தங்கள் வாழ்வாதாரத்தையும், வேலைவாய்ப்பையும் பாதுகாக்க முடியும்!
----------------------
Related Posts Plugin for WordPress, Blogger...