உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Friday, November 30, 2012

விலையில்லா மடிக்கணினிக்கு என்ன விலை கொடுக்கிறோம்? கீற்றுவில் - சி.மதிவாணன்

இதுவரை எந்த அரசும் கொண்டுவராத திட்டம் என்று இலவச மடிக் கணிணிகள் திட்டம் பற்றி பலரும் சொல்கிறார்கள். இலவசப் பொருட்களைக் கொடுப்பது அடுத்தத் தேர்தலில் ஜெயிப்பதற்கான வழி என்று இரண்டு திராவிடக் கட்சிகளும் நினைக்கின்றன. அது தவறு என்பதைச் சூடு கண்ட பூனையான கருணாநிதி தெரிந்து வைத்திருக்க வேண்டும். அடுத்த தேர்தலில் ஜெயலலிதா தெரிந்துகொள்வார்.
ஆனால், இலவசப் பொருட்களை வழங்குவது வாக்குகளைப் பெறுவதற்காக என்பது மிகவும் எளிய புரிதல். அதனை ஒரு பொருளாதார நடவடிக்கையாகவும் ஆளுவோர்கள் பயன்படுத்துகிறார்கள். அது ஒரு அரசியல் நடவடிக்கையும் கூட. இங்கே நான் சொல்லும் அரசியல் வாக்குப் பெட்டி அரசியல் அல்ல… அது அதனையும் தாண்டி நீண்ட கால நலனுக்கானது. (யாருடன் நலனுக்கானது என்பது வேறு கதை!)

education_dataதமிழ்நாட்டில் துவக்கக் கல்வி கூட இன்னும் தரமானதாக மாறவில்லை. 10 வரை படித்தவர்கள்கூட தமிழில் பிழையின்றி எழுத முடியாதவர்களாக இருக்கிறார்கள். 5வது படிக்கும் மாணவர்களில் 32 சதம் மட்டுமே எளிய தமிழ் கதையைப் படிக்க முடிகிறதாம். 4வது படிப்பவர்களில் 40.6 சதம் மாணவர்கள் மட்டுமே ஈரிலக்க எண்களில் கழித்தல் கணக்குப் போடுகிறார்கள். ஆனால், அவர்கள் பெருக்கல் வகுத்தல் கணக்குகளையும் செய்யும் திறன் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பது எதிர்பார்ப்பு!
அதுமட்டுமல்ல, தமிழகத்தின் தனியார் பள்ளிகளில் நல்ல கல்வி கிடைக்கிறது என்பதும் பொய்யாம். தனியார் பள்ளி மாணவர்கள் அரசுப் பள்ளி மாணவர்கள் அளவுக்கு தரம் தாழ்ந்தவர்களாக இருக்கிறார்கள்!
இந்த விவரங்கள் எல்லாம், Pratham என்ற அரசு சாரா நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின் விளைவாக Annual Survey of Education Report (ASER)-2011ல் வெளிப்பட்டதாக பேராசிரியர் வசந்திதேவி குறிப்பிடுகிறார். (The Hindu CHENNAI, February 19, 2012)
அதைவிடக் கேவலம் ஆசிரியர் வேலைக்கென்று படித்தவர்கள் அதற்கான அரசு நழைவுத் தேர்வில் மிகப்பெரும் எண்ணிக்கையில் தோல்வியடைகின்றனர். 6 லட்சம் பேர் எழுதினால் 2000 பேர் அளவுக்குத்தான் வெற்றி பெறுகிறார்கள்!.அகில இந்திய அளவில் பார்த்தால் 5.5 சதம் பேர் மட்டுமே ஆரம்பக் கல்வி ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர் என்று மத்திய மனித வளத்துறை அமைச்சர் ஏப்ரல் 28, 2012ல் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இதெல்லாம், ஆசிரியர் வேலைக்கு வருபவர்களின் தகுதிக் குறைவு என்று சொல்வதைக் காட்டிலும், கல்வி முறையின் தரக்குறைவு என்றே கருத வேண்டும்.
தமிழ்நாட்டில் 40 மாணவர்களுக்கு 1 ஆசிரியர் என்ற நிலையை எட்ட இப்போதுதான் முயல்கிறார்கள். ஓராசிரியர் பள்ளி, கரும்பலகை இல்லாத பள்ளி, அமர இருக்கை இல்லாத பள்ளி, குடிநீர் இல்லாத பள்ளி என்று கணக்கெடுக்கிறார்களா என்று தெரியவில்லை. அப்படிப் பார்த்தால் பள்ளிக் கல்வியின் நிலை பரிதாபமாக இருக்கும்.
இப்படி அடிப்படையே ஆட்டம் காணும்போது, தனியார் பள்ளிகளை ஊக்குவிப்பதை அரசு ஒரு வேலையாகச் செய்கிறது. அதன் விளைவான கட்டணக் கொள்ளை பற்றி அனைவரும் அறிவர். இப்போது தனியார் பள்ளியில் கட்டணம் செலுத்த முடியாத மாணவர்களுக்கும் இட ஒதுக்கீடு என்று அரசு ஒரு விளையாட்டு காட்டுகிறது. கல்விக் கொள்ளையர்களுக்குத் தெரியாதா எப்படிச் சமாளிப்பது என்று? எந்தவொரு ஊரிலும் பெரிய மனிதன்கள் பட்டியலில் இந்தக் கொள்ளையர்கள் இருப்பர். அப்புறம் கணக்குக் காட்டி சமாளிப்பது பெரிய வேலையா?
நிலைமை இப்படியிருக்க இலவச மடிக் கணிணிகள் திட்டம் எதற்கு?
10,200 கோடி ரூபாய்களை இந்தத் திட்டத்திற்கு என்று ஒதுக்கியிருக்கிறார்கள். எப்போதுமே உலகத் தரத்தில் யோசிக்கும் அம்மா, மடிக் கணிணிகளை வழங்கி மாணவர்களை பிரிட்டன், அமெரிக்க மாணவர்கள் தகுதிக்கு உயர்த்திவிட்டார் என்று சொல்லலாமா?
நாம் சில விவரங்களைப் பார்க்க வேண்டியிருக்கிறது.
இந்த மடிக் கணிணித் திட்டம் அறிவித்தபோது, அதற்கான நிபந்தனைகளில் 320 ஜிபி வன்தகடு என்று நிபந்தனை இருந்தது. இப்போது அது வெறும் 160 ஜிபியாகக் குறைத்து அளிக்கப்படுகிறது. மூன்று வருட உத்திரவாதம் என்று முதலில் அரசு சொன்னது. தற்போது அந்த உத்திரவாதம் 1 வருடமாகக் குறைந்துவிட்டது. ஓராண்டுக்கு உரிமம் பெற்ற ஆண்டி வைரஸ் என்று முதலில் சொன்னார்கள். இப்போது ஆண்டி வைரசே இல்லை. மாறாக மைக்ரோ சாப்ட்டின் செக்யூரிட்டி எசன்ஸ்ஸியல்ஸ் மட்டும் இருக்கிறது.
வெப் காமிரா என்றார்கள், அதைக் காணவில்லை. வைபி (wifi) இணைப்பு இல்லை. பொறியியல் பயிலும் மாணவர்களின் தேவைக்கேற்ப வரைகலையை ஆதரிக்கும் வன்பொருட்கள் இருக்குமா என்று தெரியவில்லை. கிடைத்த ஒரு மடிக்கணிணை நான் ஆய்வு செய்தபோது என் கம்யூட்டர் அறிவுக்கு இது உதவாது என்று தோன்றியது. வல்லுநர்கள்தான் சொல்ல வேண்டும்.
அது மட்டுமல்ல, விண்டோஸ் இயங்குதளத்தின் புகுநிலை பதிப்புத்தான் என்று அரசு சொல்லியிருந்தது. இப்போது அளிக்கப்படும் மடிக்கணினிகளில் விண்டோஸ் 7 புரபஷனல் பதிப்பு இருக்கிறது. இதன் சந்தை விலை என்ன தெரியுமா? 8,200 ரூபாய்.
நான் ஆய்வு செய்த கணிணிகளில் ஒன்று + 2 மாணவிக்கு அளிக்கப்பட்ட மடிக்கணினி. அதில் +2 வரையிலான பாடப்புத்தகங்கள் இருக்கின்றன. ஆனால், அந்த மாணவி ஒரு தப்பு செய்துவிட்டாள். அம்மா மடிக்கணினி அளிக்கும் வரை காத்திருக்காமல் தற்போது கல்லூரி முதலாண்டு படிக்கிறாள். அதாவது 12வது மாணவர்களுக்கான மடிக்கணினி அதைப் முடித்தபின்பு கிடைக்கிறது. வட்டிக்கு வாங்கிப் படித்த பின்னர் மாணவர் உதவித் தொகை வழங்கும் மானுட நேயமிக்க அரசு என்ற உன்னதம் மடிக்கணினியிலும் தொடர்கிறது.
ஆனால், 320 ஜிபியுள்ள மடிக் கணிணியை ஆய்வு செய்ததாக ஒருவர் வலைமனையில் பதிந்திருக்கிறார். ஒரு வேளை பள்ளி மாணவர்களுக்கு என்று வகை, கல்லூரி மாணவர்களுக்கு என்று ஒரு வகை இருக்குமோ என்னமோ தெரியவில்லை.
இப்படி தகவல் தெரிந்துகொள்ள முடியாத விஷயங்கள் இந்த மடிக்கணினித் திட்டத்தில் இருக்கின்றன. அவற்றைப் பற்றி தொழில்நுட்ப ரீதியாக, அல்லது காலவரிசைப்படி விரிவாக நான் எழுதப்போவதில்லை.
ஒளிவு மறைவு ஏன் என்பதை வெளிப்படுத்துவதற்குத் தேவையான தகவல்களை மட்டுமே நான் பகிர்ந்துகொள்கிறேன்.
மடிக்கணினி வழங்குவதில் பிரதான பாத்திரம் வகிக்கும் எல்காட் தனது செயல்பாட்டில் முக்கிய அங்கமாக லினக்ஸ் என்ற விலையில்லா மென்பொருளை/ திறந்த நிலை மென்பொருளைப் பயன்படுத்தப் போவதாக (2007 என்று நினைவு) அறிவித்திருந்தது. மைக்ராசாப்டின் மென்பொருளைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பது தேவையற்றது என்று தமிழக அரசின் அதிகாரியும் அப்போது எல்காட் பொறுப்பு வகித்தவருமான உமாசங்கர் ஐஏஎஸ் சொன்னார்.
 7 ஆயிரம் ரூபாய் கொடுத்து ஏன் மைக்ரோசாப்டின் விண்டோசை வாங்க வேண்டும் என்று அவர் கேட்டார். பிரதியெடுப்பதற்கு 300 ரூபாய் செலவாகும் லைனக்ஸ், மைக்ரோசாப்டை விடச் சிறந்தது. மைக்ரோசாப்ட்தான் வேண்டும் என்றால் அதற்கு 500 ரூபாய் தரலாம் என்று தெளிவாகச் சொன்னார். அந்தத் திமிறுக்கான விலையை அவர் கொடுக்க வேண்டியிருந்தது வேறு கதை.. உமாசங்கர் மேற்கொண்ட முயற்சியால் லினக்ஸ் உள்ளே கொண்டுவரப்பட்டு, தமிழக அரசுக்கு ஆண்டுக்கு 400 கோடி ரூபாய் மிச்சமானது என்று தெகல்கா எழுதியது.
சரி நமது கதைக்கு வருவோம். இப்படியாக லினக்சை உயர்த்திப் பிடித்த எல்காட் தனது முதல் டெண்டரில் லினக்சுக்கு இடம் அளித்திருந்தது. பின்னர், லினக்ஸ் இலவச மடிக் கணிணியில் இருக்காது என்று எல்காட் அறிவித்தது. 2011, செப்டம்பர் 2 அன்று செய்தியாளர்களிடம் பேசிய எல்காட்டின் நிர்வாக இயக்குநர் அடுல் ஆனந் இதனை அறிவித்தார். இது முற்றிலும் நிர்வாக நடவடிக்கை என்று சொன்னார். அதாவது, வெளிப்படை டெண்டர் அறிவித்த பின்னர் நடக்கும் உள்ளடி வேலை என்று அர்த்தம்.
அதற்கு எல்காட் சொன்ன காரணம் என்ன தெரியுமா? லினக்ஸ் சேர்க்க வேண்டுமானால், அதனை நிறுவ ரூ.100 ஒரு கணிணிக்குச் செலவாகுமாம். அதனை மிச்சம் பிடிக்கத்தான் இந்த முடிவாம்… சரி.. அப்படி மிச்சம் பிடித்து என்ன செய்தார்கள் என்றால் மைக்ரோசாப்ட் விண்டோஸ் 7ன் துவக்க நிலை பதிப்பு (ஆயிரம் அல்லது அதற்கு மேல் கொடுத்து) போடப்போகிறோம் என்றார்கள். ஏன் இந்த புத்திசாலித்தனம்?
அதன்பின் அரசின் முடிவிற்குக் கடுமையான எதிர்ப்பை வெளிப்படை மென்பொருள் ஆதரவாளர்கள் நடத்த, பசுமை வேஷம் போடும் ஜெயலலிதா அரசு இரண்டு இயங்கு தளங்களும் இருக்கும் என்று முடிவெடுத்தது. தற்போது Boss Linux மற்றும் விண்டோஸ் 7 புரபெஷனல் பதிப்பு கொண்டதாக இலவச மடிக்கணினி வெளிவந்துள்ளது.
jayalalitha_hilary_400கவனிக்கவும் கணிணியை இயக்கிய உடனே விண்டோஸ் தேர்ந்தெடுக்கப்படுவதாக கணிணி அமைக்கப்பட்டுள்ளது. மிக எளிமையாகச் சொன்னால், கணிணி அறிவில்லாத மாணவர்களுக்கு விண்டோஸ் மட்டுமே இருப்பதாகத் தோன்றும். நான் பல மாணவர்களிடம் கணிணியை வாங்கி லினக்ஸ் திறந்தவுடன் ‘அட இது என்ன தோழரே’, என்று அனைவரும் வியந்தனர்!
100 ரூபாய் கொடுத்து லினக்ஸ் வாங்கத் தயங்கிய தமிழக அரசு 8 ஆயிரம் விலையுள்ள விண்டோஸ் வாங்கியது ஏன்?  8,000 விலையுள்ள விண்டோஸ் 7னை 15 ஆயிரம் விலையுள்ள கணிணிக்குள் எப்படி அடக்கினார்கள்?  யார் ஜெயித்தார்கள்? எப்படி ஜெயித்தார்கள்?
அதெல்லாம் நிர்வாக நடவடிக்கைகள் என்று தமிழக அரசு பதில் சொல்லலாம்.
இந்த உள்ளடிக்கு பதில் தேட வேண்டுமானல், 2011 ஜூன் 4க்கும் ஆகஸ்ட் 20க்கும் இடையில் என்ன நடந்தது என்று நாம் கவனிக்க வேண்டும். ஜூலை 20-21 தேதிகளில் அமெரிக்காவின் அரசு செயலாளர் ஹிலாரி கிளிண்டன் சென்னைக்கு வந்தார். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவைச் சந்தித்தார். அதன்பின் இந்தோனேஷியா பறந்துவிட்டார்.
என்ன நடந்தது? எதற்காக வந்தார்?
இதற்கான பதில் ஹிலாரி யார் என்பதில் இருக்கிறது.
கிளிண்டனுக்கும் மைக்ரோசாப்டின் பில் கேட்டுக்கும் இடையிலான நெருக்கம் உலகம் அறிந்தது. அதற்கு யாரும் விளக்கம் கொடுக்க வேண்டியதில்லை. ஹிலாரி கிளிண்டன் தனிச்சொத்துரிமை ஆதரவுக் கருத்துள்ள மைக்ரோசாப்டின் ஆதரவாளர். Intellectual Property Rights (IPR) ஐக் காக்க வேண்டும் என்பவர். மைக்ரோசாப்டின் ஊழியர்கள் 1,30,000 அமெரிக் டாலர்களை ஹிலாரியின் ஜனாதிபதி பிரச்சாரத்திற்குக் கொடுத்தனர். அதன் பாதியளவுக்கு ஒபமாவுக்குக் கொடுத்தனர்… அதாவது கொடுக்க வைக்கப்பட்டனர். அதுமட்டுமல்ல, உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளும் மைக்ரோசாப்டை விலைகொடுத்து வாங்க வேண்டும் என அமெரிக்க நிர்ப்பந்தம் செய்கிறது என்று வெளிப்படை மென்பொருள் செயல்வீரர் பீட்டா கேபிரியல் சொல்கிறார்.
அம்மாவைப் பார்த்துவிட்டு ஹிலாரி பறந்துவிட்டார். மாணவர்கள் மாட்டிக்கொண்டார்கள்.
விளைவு என்ன?
எல்லோருக்கும் எளிதான லினக்ஸ் ஓரம் கட்டப்பட்டு பணம் கொடுத்து வாங்க வேண்டிய விண்டோஸ் புகுந்துகொண்டது.
மாணவர்கள் எம்எஸ் ஆபீஸ்தான் பழகுவார்கள். விளைவாக, எதிர்காலத்தில் விண்டோஸ் இயங்குதளம் மட்டுமே தெரிந்த குருடர்கள் உற்பத்தியாவர்கள். (லினக்சும் வைத்திருக்கிறோம் என்று அரசு கதை சொல்லும், இந்தக் கதை சொல்வதற்கென்றே அதை வைத்திருக்கிறார்கள்.) அதே சமயம் மைக்ரோசாப்ட்டின் வணிக எதிர்காலம் உத்திரவாதம் ஆகியிருக்கிறது. மைக்ரோசாப்டுக்குப் பணம் கட்டுவதற்கென்றே மடிக்கணினியின் தரத்தைக் குறைத்துவிட்டார்கள். (வன்தட்டு, வைபி என்று மேலே சொல்லியிருக்கிறேன்.)
எம்எஸ் ஆபீசுக்கு என்றும் மேம்பட்ட விண்டோசைப் பெறவும் மாணவர்கள் பில் கேட்சுக்கு அழ வேண்டும். இல்லையென்றால், மடிக்கணினி மடிப்பெட்டியாக சுருங்கிவிடும்.
அதெல்லாம் கிடக்கட்டும்..
எனக்கொரு கேள்வி.
9,12,000 மடிக்கணிக்கு ஒரு பிரதி விண்டோஸ் 7க்கு 8 ஆயிரம் என்று வைத்துக்கொண்டால், அல்லது சில ஆயிரம் தள்ளுபடி கொடுத்தார்கள் என்று வைத்துக்கொண்டாலும் கூட எத்தனை கோடி ரூபாய் தமிழக மக்களின் பணம் மைக்ரோசாப்டுக்குப் போகிறது?
இதனை மறைக்க லினக்ஸ்சுக்கு 100 ரூபாய் கொடுத்தால் மடிக்கணினி விலை அதிகமாகிவிடும் என்று சொன்னார்களே, அவர்கள் எத்தனைப் பெரிய புத்திசாலிகள்? அதனையெல்லாம் நம்பும் நம்போன்றவர்கள் எத்தனை பெரிய முட்டாள்கள்?
பொதுவாகவே, விலையில்லாப் பொருள் என்பது மக்களுக்கு அளிக்கப்படும் மான்யம் அல்ல… முதலாளிகளுக்கு அளிக்கப்படும் மான்யம் என்பதுதான் இன்றைய நிலை. அம்மாவின் ‘பெத்த’ மூளையில் பிறந்த திட்டம் பில் கேட்சுக்கு எத்தனை பெரிய லாபத்தைக் கொடுத்திருக்கிறது பாருங்கள்.
இப்போது என் கட்டுரையின் தலைப்பிற்கு வாருங்கள்.
விலையில்லா மடிக்கணினிக்கு என்ன விலை கொடுக்கிறோம்?
அதனை ரூபாயில் சொல்ல முடியாது நண்பர்களே.. தமிழகத்தின் அறிவுச் சுதந்திரத்திற்கும், நமது பிள்ளைகளின் எதிர்காலத்திற்கும், நமது நாட்டுத் தொழிலின் சுதந்திர வளர்ச்சிக்கும் என்ன விலை சொல்வீர்கள்? அதனை ரூபாயில் எப்படி சொல்வீர்கள்?
- சி.மதிவாணன் ( mathivanan_c@yahoo.com)
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=22141%3A2012-11-30-06-28-31&catid=1%3Aarticles&Itemid=264&utm_source=feedburner&utm_medium=email&utm_campaign=Feed%3A+keetru%2FmAfm+%28Keetru+RSS+Feed%29
Related Posts Plugin for WordPress, Blogger...