உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Monday, December 10, 2012

ஆதார் அட்டை கை மேல காசு! ஞாநி

கை மேல காசு!
மத்திய அரசின் புதிய ரொக்க மான்ய திட்டத்தின்படி இனி இந்தியர்கள் எல்லாருடைய ரேஷன் அட்டைகளையும் குப்பைத் தொட்டியில் எறியவேண்டியதுதான். அல்லது வருகிற பொங்கல் சமயத்தில் போகியன்று தீக்கிரையாக்கி குளிர் காயலாம்.
அரசு மான்ய விலையில் மக்களுக்கு அளித்து வரும் எல்லா பொருட்களையும் இனி மக்கள் தனியாரிடம்தான் வாங்க வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தும் விதத்தில், விலை குறைத்தோ விலை இல்லாமலோ தரப்பட்ட பொருட்களுக்கான அரசு மான்யம் இனிமேல் ரொக்கப் பணமாகவே மக்களுக்குத் தரப்படும் என்றும் மன்மோகன் அரசு அறிவித்திருக்கிறது.
இதை உடனடியாக இந்தியாவில் 51  மாவட்டங்களில் செயல்படுத்த்ப் போகிறது. பின்னர் படிப்படியாக செய்வதே திட்டம். இதில் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், புதிய ‘கை மேல காசு’ திட்டத்தின் கீழ் யார் யாருக்கு மான்யம் தரப்படவேண்டும் என்பதை தீர்மானிக்கப்போவது ஆதார் அடையாள அட்டைதான்.
ஏன் இந்த திட்டம் ? இதுவரை அரசு மக்களுக்கு மான்ய விலையில் தரும் பல பொருட்கள் தகுதியானவர்களுக்கு மட்டும் போகாமல், வசதியானவர்களுக்கும் போவதை தடுப்பது ஒரு நோக்கம். இந்த நோக்கம் என்னவோ நல்ல நோக்கம்தான். வெள்ள நிவாரண உதவியையும் ம் இலவச டி.வி.பெட்டியையும் கூச்சமே இல்லாமல் காரில் போய் வாங்கிக் கொண்டு வரக்கூடிய  ‘ஏழைகள்’இருக்கும் தேசம்தானே இது. ரேஷன் அட்டைகளிலும் பல போலிகள் உலவுவதும் நிஜம்தான்.
யார் தகுதியானவர், யார் தகுதியில்லாதவர் என்பதை இனி ஆதார் அட்டைதான் தீர்மானிக்கும். ஆதார் அட்டை தரும்போது ஒருவரிடம் பெற்ற விவரங்களின் அடிப்படையில் அவர் மான்யத்துக்கு உரியவரா இல்லையா என்பது முடிவு செய்யப்படும். இதற்கு ஏன் தனியே ஆதார் அட்டை ? இதைத் தரும்போது ஒருவரின் சமூகப் பொருளாதார நிலையை கணக்கிடுவது போல, ரேஷன் அட்டை வைத்திருப்பவரின் தகுதியையே விசாரித்து தகுதியற்றவரை நீக்கியிருக்கலாமே ? கூடாது என்கிறது அரசு. ஆதார் அட்டை என்பது ஒரு பிரஜையின் அடையாளத்தைக் கொண்டு, ஏழ்மைக்கான சாட்சியம், வெவ்வேறு திட்டங்களின் கீழ் பெறும் கூலியின் பதிவுகள், மான்யங்களின் அளவுகள், அரசிடமோ, வங்கியிடமோ கேட்கும் கடன், பெற்ற கடன், கட்டிய கடன் விவரங்கள் என்று எல்லாவற்றையும் கணிணி வழியே பதிந்துவைக்க வசதியான் ஒற்றைப் பதிவு முறை என்கிறது அரசு.
கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், ஆதார் அட்டை என்பதற்கு இன்னமும் சட்டப்படியான சம்மதமே வரவில்லை. ஒவ்வொரு பிரஜையும் இந்த அட்டை வைத்திருக்க வேண்டும் என்று எந்த சட்டமும் இயற்றப்படவில்லை. விரும்பினால் இந்த அட்டையைப் பெறலாம் என்றே இப்போதைய நிலை உள்ளது. மொத்த மக்கள் தொகையில் இதுவரை வெறும் 22 கோடி பேர் மட்டுமே இதுவரை ஆதார் அட்டைக்காக பதிவு செய்துள்ளனர். (தமிழ் நாட்டில் 69 லட்சம் பேர்தான்.) ஆதார் அட்டையை பிரஜா உரிமை அட்டை போல அரசு ஆக்கப் பார்ப்பதில், ஒரு தனி நபரின் அந்தரங்க உரிமைகளில் அரசு கண்காணிப்புக்கு இடம் இருப்பதாக ஏற்கனவே எதிர்ப்பு கிளம்பியது. எனவே ஆதார் அட்டையை அனைவருக்குமானதாக ஆக்கும் சட்டம் இன்னும் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது.
ஆனால் இப்போது அவசரஅவசரமாக மன்மோகன் அரசு ஆதார் அட்டை அடிப்படையில் இனி மான்யம் எல்லாம் ரொக்கமாக மட்டுமே தர்பபடும் என்று அறிவிப்பதன் ரகசியம் என்ன ? பல வருடங்களாகவே உலக வங்கியும் அமெரிக்க அரசின் தனியார் சார்பு பிரசாரகர்களும் இந்தியாவில் உணவு உட்படஎதற்கும் அரசு மான்யம் கொடுக்கப்படக் கூடாது என்று வற்புறுத்தி வருகிறார்கள்.  எல்லாவற்றையும் மார்க்கெட்டே தீர்மானிக்கவிடவேண்டும் என்பதே அவர்கள் நிலை. ஆனால் இதை செயல்படுத்த விரும்பியும் முடியாமல் மன்மோகன் இதுவரை திணறிவந்தார். இப்போது தன் பதவிக்காலம் முடியும் வேளையில் உலக முதலாளிகள் சார்பான எல்லா முடிவுகளையும் செய்ல்படுத்தி விட்டே போவது என்ற பிடிவாதத்துக்கு வந்துவிட்டார்.
மான்யங்களை ஒழிப்பதுதான் அவரது இறுதி நோக்கம். முதல்கட்டத்தில் மான்யமாகப் பொருட்களைத் தருவதை நிறுத்தி காசாகக் கொடுக்க ஆரம்பித்தால், அந்தக் காசைக் கொண்டு தனியாரிடம்தான் மக்கள் எதையும் வாங்கும் நிலை உருவாகும். அடுத்த கட்டமாக, காசாகத் தரும் மான்ய அளவைப் படிப்படியாகக் குறைத்து நீக்க்கிவிடலாம் என்பதே தொலை நோக்கு திட்டம்.
இதன் உடனடி விளைவு என்ன என்று பார்க்கலாம். அரசு நடத்தி வரும் ரேஷன் கடைகளை எல்லாம் மூடவேண்டி வரும். லட்சக்கணக்கான ஊழியர்களைக் கொண்ட ஆயிரக்கணக்கான ரேஷன் கடைகள், இதர தனியார் கடைகள் போல இயங்கமுடியாமல் மூடப்படும். ரேஷன் கடை மூலம் அரிசி, கோதுமை, சர்க்கரை போன்றவற்றை அரசு விற்கப்போவதில்லை என்றால், அடுத்த கட்டமாக அவை எதையும் அரசு விவசாயிகளிடம் இருந்து வாங்கத் தேவையில்லை. குறைந்தப்ட்ச கொள்முதல் விலையின் மூலம் அரசு இதுவரை விவசாயிகளுக்கு ஓரளவு வாழ்க்கை உத்தரவாதம் தருவது அடியோடு கைவிடப்படும்.எல்லா விவசாயிகளும் தங்கள் பொருட்களை தனியாருக்கு மட்டுமே விற்கும் நிலை ஏற்படும்.. தனியார் கொள்முதல் செய்து வைத்துக் கொண்டு பதுக்கலாம். செயற்கையான பொருள் பஞ்சத்தை ஏற்படுத்தி விலையை உயரச் செய்யலாம். ஆனால் அரசு தன் வசம் இருக்கும் ஸ்டாக்கை பயன்படுத்தி விலையை சரி செய்யவைக்க முடியாது. ஏனென்றால் அதனிடம் ஸ்டாக்கோ ரேஷன் கடையோ இருக்காது. அரசு காசாகக் கொடுத்த மான்யத்தைக் கொண்டு தனியார் கடையில் மட்டும்தான் மக்கள் பொருள் வாங்கும் நிலை என்றால் விலைகளை மார்க்கெட்தான் தீர்மானிக்கும்.
அரசு பொருளுக்கு பதில் கொடுக்கும் மான்யக் காசை ஆதார் அட்டைதாரரின் வங்கிக் கணக்கில் செலுத்தும் என்று அறிவித்திருக்கிறது. இந்தியாவில் வறுமையிலும் வறுமைக்கோட்டுக்குக் கீழேயும் இருப்போர் இதற்காக வங்கிக் கணக்கைத்  தொடங்க வேண்டும். கிராமப் புற மக்கள் தொகையில் வெறும் 54 சதவிகிதம் பேருக்குத்தான் வங்கிக் கணக்கு இருக்கிறது. ஆதார் அட்டை இருப்போருக்கெல்லாம் புதிதாக வங்கிக் கணக்கு தொடங்குவது என்றால் ஒவ்வொரு கிராமத்திலும் குறைந்தபட்சம்  ஒரு வங்கிக் கிளை திறக்க வேண்டும். அல்லது ஏடிஎம் திறக்க வேண்டும். அது வங்கிக்கே கட்டுப்படியாகாது. இதற்கு பதிலாக நடமாடும் ஏஜண்ட்டுகளை ஒவ்வொரு கிராமத்திலும் நியமித்து அவர் கைமெஷின் மூலம் ஒவ்வொருவர் கணக்கிலும் எவ்வளவு பணம் இருக்கிறது என்று பார்த்து சொல்லும் வசதியை உருவாக்க ஒரு யோசனை இருக்கிறது. இதுவும் நடைமுறையில் சிக்கல்தான். பொருள் வாங்க மான்யப் பணத்தை எடுக்க வங்கிக்குதான் போயாகவேண்டும்.
வங்கிக் கணக்கு யார் பெயரில் இருக்கும் ? ரேஷன் அட்டையில் அப்பா பெயர் இருக்கலாம். ஆதார் அட்டை வைத்திருக்கும் மகனோ, மகளோ கூலியோ மான்யமோ பெறுவதானால் அவர்கள் பெயரில் வங்கிக் கணக்கு தேவை. குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் வங்கிக் கணக்கும் தேவை. ஆதார் அட்டையும் தேவை என்று ஆகிவிடும். ரேஷன் அட்டைக்கும் ஆதார் அட்டைக்கும் இடையே முரண்பாடு இருந்தால் தீர்ப்பது இன்னும் சிக்கலை ஏற்படுத்தும்.
இந்த ஓட்டையான திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்தியே தீரப் போவதாக மன்மோகன் அரசு பிடிவாதமாக அறிவித்திருக்கிறது. இந்த திட்டம் எப்படி செயல்படும் என்பதற்கு முன்னோடியாக ஒரு இடத்தில் செயல்படுத்திப் பார்த்தார்கள். ராஜஸ்தானில் ஆல்வார் மாவட்டத்தில் கோட் காசிம் கிராமத்தில் இது எப்படி செயல்பட்டது என்பதை அவுட்லுக் இதழ் அமபலப்படுத்தியிருக்கிறது. கடந்த ஜனவரி முதல் நவம்பர் வரை இங்குள்ள ரேஷன் கடையில் மண்ணெண்ணெய் மான்ய விலைக்கு பதில் மார்க்கெட் விலையில் விற்கப்பட்டது. மான்ய விலை லிட்டருக்கு 15 ரூ. மார்க்கெட் விலை 50 ரூபாய். மக்களிடம் 35 ரூபாய் உங்கள் கணக்கில் அரசு போடும் என்று சொல்லப்பட்டது. மக்கள் கடையில் போய் 50 ரூபாய்க்கு வாங்கியாக வேண்டிய நிலை. வாங்கினார்கள். ஆனால் மூன்று நான்கு மாதமாகியும் வங்கிக் கணக்கில் மான்யம் வந்து சேரவில்லை.  எப்போது வங்கிக்கணக்கில் வரும் ? மாநில அரசுக்கு வந்துவிட்டது. சிக்கிரமே அனுப்புவோம் என்கிறார் கலெக்டர். அதுவரை முன்பணம் போட்டு கிரசின் வாங்க, வறுமைக் கோட்டில் இருப்பவர்களால் எப்படி முடியும் ? திட்டத்தின் கீழ் பதிவு செய்த 350 பேரில் இப்போது 30 பேர்தான் கடைக்கு வந்து வாங்குகிறார்கள். கிரசின் உபயோகிக்கவே முடியாமல் போய் சுள்ளி, விறகு என்று தேடப் போய்விட்டார்கள். இதுதான் சோதனை முயற்சியின் நிலை.
பணத்தை முன்கூட்டியே கொடுக்கும் ஏற்பாடு வந்துவிடுவதாகவே வைத்துக் கொள்வோம். தமிழ்நாட்டில் இப்போது விலையில்லாத அரிசி 20 கிலோ தரப்படுகிறது. இது திரும்ப கடைக்கு போய் மார்க்கெட்டில் இட்லி மாவுக்காக விற்கப்படும்போது கிலோ 4 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆக, இந்த அரிசியின் மார்க்கெட் மதிப்பு 4 ரூபாய்தான். என்னைப் போன்ற வசதியானவர்கள் கிலோ 30 முதல் 40 ரூ வரையிலான அரிசியை உபயோகிக்கிறோம். இப்போது 20 கிலோ இலவச, மன்னிக்கவும் விலையில்லாத அரிசி பெறுவோர் இனி மார்க்கெட்டில்தான் அரிசி வாங்கி சோறு சமைக்க வேண்டுமென்றால், நிச்சயம் 4 ரூ அரிசியை வாங்கமாட்டார்கள். குறைந்தபட்சம் கிலோ 15 ரூபாய் அரிசியாவது தேவை. அரசு மான்யமாக எதைக் கொடுக்கும் ? இப்போது தரும் 4 ரூபாய் மதிப்புள்ள அரிசியானால் எவ்வளவு மான்யம் ? 15 ரூபாய் அரிசியென்றால் எவ்வளவு மான்யம்? இந்தக் குழப்பங்கள் தவிர வேறு ஓர் அடிப்படை பிரச்சினை ரொக்க மான்யத்தில் இருக்கிறது.
காசாக ஏழை மக்கள் கையில் தரும் பணம், எந்த நோக்கத்துக்காக தரப்படுகிறதோ அதே நோக்கத்துக்காக செலவழிக்கப்படும் வாய்ப்பு நம் சமூகச் சூழலில் மிக மிகக் குறைவு. உணவுப் பொருளாகத் தரும்போது நிச்சய்ம் அது வீட்டுக் குழந்தைகள் வரையில் உணவாகவே போய் சேரும் வாய்ப்பு இருக்கிறது. காசாகக் கொடுத்தால், நமது டாஸ்மாக் கல்ச்சரில், நிச்சயம் வீணாகிப் போகும். வீட்டுப் பெண்கள் பெயருக்கே வங்கிக் கணக்கு வைத்து பணத்தைக் கொடுத்தால் கூட, இன்று ஏராளமான ஏழைமக்கள் வீடுகளில், பெண்ணை மிரட்டி, அடித்து உதைத்து, கொஞ்சி, கெஞ்சி, மிஞ்சி பணத்தைப் பறிக்கும் கணவன்கள், பிள்ளைகள் எனக்குத் தெரிந்தே பலர் உள்ளனர்.
இன்னொரு பக்கம், ஏழ்மை அதிகமாக அதிகமாக, மத, சாதி சடங்குகளில் சாங்கியங்களில்  பணத்தை வீணடிக்கும் விகிதமும் அதிகரித்துக் கொண்டே போகிறது. எனக்குத் தெரிந்த ஒரு வீட்டுப் பணியாளரான விதவைத் தாய் தன் மகன் திருமணத்துக்காக ஐந்து வட்டியில் கடன் வாங்கிக் கொண்டிருக்கிறார். அண்மைக் காலங்களில் நகரங்களையொட்டிய பகுதிகளில் பல விவசாயிகள் லட்சக்கணக்கான ரூபாய்களுக்கு தங்கள் நிலத்தை விற்றுவிட்டு, சில மாதங்களிலேயே ஓட்டாண்டிகளான நிகழ்ச்சிகள் கணிசமாக உள்ளன. இந்தியச் சூழ்நிலையில் தங்களுக்கு எது முன்னுரிமையானது என்பதை தீர்மானிக்கும் பக்குவமான மனநிலை இல்லாதோர் ஏழை முதல் பணக்காரர் வரை எல்லா மட்டங்களிலும் கணிசமாக உள்ளனர். தப்பான வீண் செலவு செய்தாலும் பணக்காரர் தப்பிப்பது போல ஏழை தப்பிக்கும் வாய்ப்பே இல்லை. தற்கொலைதான் தீர்வென்றாகிவிடுகிறது.
ஆனால் மன்மோகன் அரசுக்கு இதைப் பற்றியெல்லாம் எந்தக் கவலையும் இல்லை. இந்தியாவில் தனியார் பெரு முதலாளிகளின் வணிக வாய்ப்பை பெருக்குவது, அந்நிய வங்கிகளுக்கு புது வாய்ப்புகளை ஏற்படுத்துவது, இந்தியாவில் ஈட்டிய பணத்தை தம் நாடுகளுக்கு எடுத்துச் செல்ல அந்நிய கம்பெனிகளுக்கு உதவுவது, அவர்களுக்கெல்லாம் மின்சாரம் முதல் நிலம் வரை மான்யங்களை அள்ளித் தருவது என்ற அவரது கொள்கையை எதைப் பற்றியும் கவலைப்படாமல் செய்து முடிக்க துடிப்பவராக அவர் இருக்கிறார்.
இதுவரையில் அவரைத் தடுக்க எந்த சக்தியாலும் முடியவில்லை. ஆனால் ஆதார் முதல் முட்டுக் கட்டையாக அமையலாம். ஏனென்றால் அதை செய்து முடிக்க இன்னும் ஓரிரு வருடம் தேவை. அதற்குள் வரும் தேர்தலில் அவர் ஆட்சியை முடித்து வைக்கும், ஒட்டகத்தின் முதுகை முறித்த் கடைசிப் பொட்டலமாக ஆதார் அமையலாம்.
இந்த வருட அதிர்ச்சி
கழிப்பறை இல்லாத வீடு
புத்தம் புதிதாகக் கோடிக் கணக்கான ரூபாய் செலவில் வீடு கட்டுகிறவர் அந்த வீட்டில் கழிப்பறையே வைத்துக் கட்டாமல் அதில் குடியேறினால், அவரை அதிபுத்திசாலி என்போமா? படுமுட்டாள் என்போமா?
இந்திய அரசாங்கம் கூடங்குளத்தில் அதைத்தான் செய்திருக்கிறது. சுமார் 13 ஆயிரம் கோடி ரூபாய் செலவழித்து கட்டியிருக்கும் அணு உலையில் வரப் போகும் அணுக்கழிவுகளை எங்கே வைப்பதென்றே இன்னும் முடிவு செய்யவில்லை என்று நீதிமன்றத்தின் முன்பு ஒப்புக் கொண்டிருக்கிறது. அணுக்கழிவுகளுக்கான ஏற்பாடு என்ன என்ன என்று திரும்பத் திரும்ப   எதிர்ப்பாளர்களும் நீதிபதிகளும் கேட்டதையடுத்து இந்த அதிர்ச்சியான தகவல் வெளிவந்திருக்கிறது. கைவிடப்பட்ட கோலார் தங்கச் சுரங்கத்துக்குள் வைக்கப்போவதாக முதலில் செய்தி வந்தது. கோலார் மக்கள் கடும் எதிர்ப்பைக் காட்டியதும் அப்படி ஒரு திட்டமே இல்லை என்று அரசு மறுத்தது. அப்படியானால் எங்கேதான் அணுக் கழிவை வைக்கப் போகிறீர்கள் என்று நீதிமன்றம் கடைசியாகக் கேட்டதும் இன்னும் எதுவும் முடிவு செய்யவில்லை என்று அரசு பதில் சொல்கிறது.
ஆபத்தான அணுக் கழிவுகளை எங்கே எப்படி வைப்பது என்றே முடிவெடுக்காமல் உலையைக் கட்டி முடித்து இயக்குவதற்கு அவசரப்படும் மன்மோகன் அரசையும் அதன் அணுசக்தித் துறையையும் சுமார் ஒன்றரை வருடங்களாகப் பல முறை எதிர்ப்பாளர்கள் இது பற்றிக் கேள்வி கேட்டபோதெல்லாம், ஏற்பாடுகள் எல்லாம் சிறப்பாகவும் பத்திரமாகவும் இருப்பதாகத் திரும்பத் திரும்பச் சொன்னதெல்லாம் பொய் என்று இப்போது தெளிவாகிவிட்டது.  மன்மோகன் அரசு பொய் சொன்னது மட்டுமல்ல, கேள்விகள் கேட்டு அமைதியான வழியில் போராடிய ஆயிரக்கணக்கான மக்கள் மீது நூற்றுக்கணக்கான வழக்குகளை ஜெயலலிதா அரசு போட்டிருக்கிறது. பத்தடி நடப்பதற்கே தள்ளாடக் கூடிய முதியவரை  குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்திருக்கிறது. அணுக் கழிவை என்ன செய்வது என்று முடிவெடுக்காமலே ஆபத்தான திட்டத்தை மக்கள் மீது திணிக்கும் அதிகாரிகள், விஞ்ஞானிகள் மீதெல்லாமல்லவா குண்டர் சட்டம் நியாயப்படி பாயவேண்டும் ?
கூடங்குளம் அணுக்கழிவை எங்கே வைப்பதென்று இன்னும் தெரியாமலிருக்கும் அரசு, இதுவரை கல்பாக்கத்திலும் இதர அணு உலைகளிலும் உருவாக்கிய அணுக்கழிவுகளை எங்கே எப்படி வைத்திருக்கிறது என்ற உண்மைகளை உடனடியாக மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

http://www.gnani.net/%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81/
Related Posts Plugin for WordPress, Blogger...