உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Tuesday, May 07, 2013

தண்ணீர் – கேள்வி பதில் ! ( யாழ் தளத்தில் வந்த பதிவு )கேள்வி 1:
நம் நிலத்தில் உள்ள தண்ணீரை எடுத்து பாட்டிலில்அடைத்து நமக்கே விற்கும் உரிமை எப்படி வெளிநாட்டு நிறுவனங்களுக்கு கிடைக்கிறது ?

கேள்வி 2:
தண்ணீர் வியாபாரம் செய்யும் முதலைகளை அப்புறப்படுத்துவதில் உள்ள சிக்கல் என்ன ? டாஸ்மார்க் நடத்தும் அரசு குடி தண்ணீர் விற்பனையை செய்வதில்லை ஏன் ?

கேள்வி 3:
வருங்காலத்தில் தண்ணீர் பிரச்சனை எப்படி உருவெடுக்கும் ?


- தளபதி பிரபு
_____________________________________________

அன்புள்ள தளபதி பிரபு,

மக்களுக்கு சுத்தமான குடிநீரை இலவசமாக வழங்க வேண்டியது சமூகக் கடமை என்பது தான் இதுகாறும் இருந்து வந்த பொதுக் கருத்து. ஆனால், தற்போது அப்படி ஒரு கடமையை அரசு சுமக்கத் தேவையில்லை என்கிற கருத்து முதலாளித்துவ அறிஞர்களால் உருவாக்கப்பட்டு பரப்பப்பட்டு வருகிறது.
water-fat-cat.jpg

சமீபத்தில் ஆவணப்படம் ஒன்றிற்காக பேட்டியளித்துள்ள பன்னாட்டுக் கம்பெனியான நெஸ்லேவின் சேர்மன் பீட்டர் ப்ரெபெக், தண்ணீர் அடிப்படை மனித உரிமைகளின் கீழ் வராது என்றும், இது மற்ற உணவுப் பண்டங்களைப் போல் விற்பனைச் சரக்காக மாற்றப்பட வேண்டுமென்றும் பேசியுள்ளார். தண்ணீர் ஒரு முக்கியமான கச்சாப் பொருள் என்றும், மற்ற பண்டங்களுக்கு இருப்பதைப் போல் இதற்கும் ஒரு சந்தை மதிப்பு இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

70-களின் மத்தியில் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதை சந்தை மதிப்பாக மாற்ற முயற்சித்த நெஸ்லேவின் ‘பாரம்பரியம்’ பிரபலமானது. குழந்தைகளுக்கான தனது ஊட்டச்சத்து பானத்தின் சந்தையை விரிவுபடுத்துவதற்காக தாய்மார்கள் தாய்ப் பாலூட்டுவதைத் தவிர்க்கச் செய்ய தீவிர பிரச்சாரங்களை மேற்கொண்டது நெஸ்லே. இதற்காக பல்வேறு நாடுகளின் மகப்பேறு மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் லாபி செய்து தனது ஊட்டச்சத்து பானத்தை குழந்தைகளுக்கு கொடுக்குமாறு அரசின் செலவில் பிரச்சாரம் செய்ய வைத்தது. சுத்தமான நீர் கிடைக்காத ஏழை நாடுகளில், தாய்ப்பாலுக்கு பதிலாக தூய்மையற்ற நீரில் கரைத்த நெஸ்லேவின் ஊட்டச்சத்து பானம் கொடுக்கப்பட்டது பல குழந்தைகளின் இறப்புக்கு காரணமானது.
இப்போது, நெஸ்லே நிறுவனத்தின் தலைவர் பேசியுள்ள இந்தக் கருத்துக்கள் ஆண்டுக்கு $6.9 பில்லியன் (சுமார் ரூ 38,000 கோடி) பாட்டில் நீர் விற்பனை செய்யும் அதன் சந்தையை விரிவுபடுத்துவதை நோக்கமாக கொண்டவை என்பதை விரிவாக விளக்கத் தேவையில்லைதான்.

மூன்றாம் உலக நாடுகளில் குடிநீர் வினியோகத்தை மேற்கத்திய பன்னாட்டு தனியார் கம்பெனிகளிடம் தாரைவார்க்கும் போக்கு எண்பதுகளிலேயே துவங்கி விட்டது. இந்த வகையில் தென்னாப்பிக்கா மற்றும் பல்வேறு தென்னமெரிக்க நாடுகள் ஏற்கனவே ‘சூடு கண்ட பூனைகளாக’ நம்முன் சிறந்த உதாரணமாக உள்ளன.

Argentina-Water.jpg
அர்ஜென்டினாவில் தண்ணீர் தனியார் மயம் : கூடுதல் தேர்வுகள்

1. 1990-களில் உலக வங்கியின் வழிகாட்டுதலின் படி, தென்னமெரிக்க நாடான பொலிவியாவின் கொச்சபாம்பா பகுதியின் நீர் வளம் முழுவதும் பெக்டெல் என்கிற பன்னாட்டு நிறுவனத்தின் பாதங்களில் ஒப்புவிக்கப்பட்டது. ‘தண்ணீர் சந்தையில்’ தனது ஏகபோகத்தை நிலைநாட்டிக் கொண்ட பெக்டெல், அதைத் தொடர்ந்து குடிநீரின் விலையை அசாத்தியமான அளவுக்கு உயர்த்திக் கொண்டே போனது. வறண்ட வாய்க்குத் தண்ணீர் கூட கிடைக்காது என்கிற நிலைக்கு கொச்சபாம்பா மக்கள் தவிக்க விடப்பட்டனர். அதைத் தொடர்ந்து 2000-ம் ஆண்டில் ஆத்திரமுற்ற மக்கள் கொச்சபாம்பா தெருக்களில் போராட்டங்களில் இறங்கினர். தங்கள் உரிமைகளுக்காக போராடிய மக்களின் எழுச்சி நிலைத்து நின்றது – பெக்டெல் நிறுவனம் விரட்டியடிக்கப்பட்டு தண்ணீர் வினியோகம் செமாப்பா என்ற பொதுத்துறை நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

ஆனால், நாட்டின் பிற பகுதிகளில் தண்ணீர் தனியார் மய முயற்சிகள் தொடர்ந்தன. பொலிவிய தலைநகரின் எல் அல்டோ பகுதியில் தண்ணீர் வழங்கும் ஒப்பந்தம் பன்னாட்டு நீர் நிறுவனமான சூயஸிடம் ஒப்படைக்கப்பட்டது. 2005-ம் ஆண்டில் எல் அல்டோ மக்கள் தெருக்களில் இறங்கி போராடிய பிறகு சூயஸ் உடனான ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.

2. தென் ஆப்பிரிக்காவில் உலக வங்கி, ஐஎம்எப் மற்றும் மேற்கத்திய நாட்டு அரசுகளின் வழிகாட்டல்களை பின்பற்றி பன்னாட்டு நீர் நிறுவனங்களான சூயஸ், பைவாட்டர் போன்றவற்றின் வற்புறுத்தலுக்கு பணிந்து தண்ணீர் தனியார் மயம் செயல்படுத்தப்பட்டது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு தண்ணீர் வினியோகத்துக்காக ஒதுக்கப்படும் நிதி குறைக்கப்பட்டு தனியார் நிறுவனங்கள் பங்கெடுப்பதற்கான நிதி ஏற்பாடுகளை அரசு உருவாக்கியது. இதனைத் தொடர்ந்து பல உள்ளாட்சி அமைப்புகள் தண்ணீர் வினியோகத்தை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க ஆரம்பித்தன.
SA-Water-Privatization.jpg
தென் ஆப்பிரிக்கா : நிறவெறியை ஒழித்து விட்டு தண்ணீர் தனியார் மயத்தில் மக்களை அடிமைப்படுத்தும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ்.

இதன் உடனடி விளைவாக ஏழை மக்களுக்கு தண்ணீர் வழங்கும் சேவைகளுக்கான கட்டணம் பெருமளவு உயர்த்தப்பட்டது. சூயஸ் நிறுவனத்தின் தனியார் சேவை அமல்படுத்தப்பட்ட 1994க்கும் 1996க்கும் இடையே கேப்டவுனிலுள்ள ஒரு நகரில் தண்ணீர் கட்டணம் 6 மடங்கு உயர்த்தப்பட்டு மாதத்துக்கு R60 (இன்றைய மதிப்பில் சுமார் ரூ 350) என்று உயர்த்தப்பட்டது. கேப்டவுனின் பிற நகரங்களிலும் ஜோகன்னஸ்பர்க்கிலும் சுரங்கங்களுக்கும் தொழிற்சாலைகளுக்கும் தண்ணீர் வழங்குவதற்கான திட்டத்திற்கு நிதி திரட்டுவதற்காக வீடுகளுக்கு வழங்கப்படும் குடிநீர் கட்டணம் உயர்த்தப்பட்டது.

உலக வங்கியின் ஆலோசனைப் படி தண்ணீருக்கான கட்டணம் செலுத்த முடியாதவர்களுக்கு தண்ணீர் இணைப்பை துண்டிக்கும் கொள்கையும் அமல்படுத்தப்பட்டது. 2005-ம் ஆண்டு மதிப்பீட்டின் படி 1 கோடி ஏழை தென் ஆப்பிரிக்கர்களின் தண்ணீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. நிலுவைகளை வசூலிக்கும் சட்ட நடைமுறைப் படி 20 லட்சத்துக்கும் அதிகமான பேர் அவர்களது வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் ஆதாரங்கள் மறுக்கப்பட்ட குடும்பங்கள் மாசுபடுத்தப்பட்ட தண்ணீர் ஆதாரங்களிலிருந்தும் தொலை தூர கிணறுகளிலிருந்தும் தண்ணீர் எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டன.

இதன் காரணமாக 2000-ம் ஆண்டில் தென் ஆப்பிரிக்காவின் மிகப் பெரிய காலரா கொள்ளை நோய் ஜூலு நேட்டாலில் பரவியது. 1.2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டு 300க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். சூயஸ் நிறுவனம் குத்தகைக்கு எடுத்திருந்த ஜோகன்னஸ்பர்க்கின் அலெக்சாண்டிரா நகரீயத்தில் ஏற்பட்ட காலரா கொள்ளை நோய் பரவலில் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். மக்கள் போராட்டங்களுக்குப் பிறகு அரசின் தலையீடுதான் நோய் பரவலை தடுக்க முடிந்தது.

இந்தியாவிலும் பன்னாட்டுத் தொழிற்கழகங்கள் தங்களது உத்தியை நயவஞ்சகமான முறையில் செயல்படுத்த ஆரம்பித்திருக்கின்றன. சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட தேசிய நீர் கொள்கை 2012 தண்ணீர் சேவைகளில் அரசின் பங்கீடை குறைத்துக் கொண்டு பொதுத்துறை-தனியார் துறை கூட்டு மாதிரியின் கீழ் தனியார் நிறுவனங்களை கொண்டு வருவதை முன் வைக்கிறது.

உள்ளூராட்சி நிர்வாக அலகுகளான நகராட்சி மாநகராட்சி மட்டங்களில் நீர் மேலாண்மைக்கான கூட்டுக்குழுக்கள் அல்லது ஒழுங்குமுறை ஆணையங்களை ஏற்படுத்தி, அவற்றுள் ஊடுருவி, “தண்ணீரை சிறப்பாக பயன்படுத்துவது பற்றிய வழிகாட்டுதல்களை” உள்ளூராட்சிகளுக்கு வழங்குகின்றன, பன்னாட்டு நிறுவனங்கள். இந்த வழிகாட்டுதல்களின் படி, நீர் வழங்கல் நடவடிக்கையில் அரசு – தனியார் கூட்டுத் திட்டங்கள் ஊக்குவிக்கப்படுகின்றன.
water_privatization.jpg

தண்ணீர் தனியார்மயம்

பன்னாட்டு நிறுவனங்களை அனுமதிக்கும் இது போன்ற திட்டங்களுக்குத்தான் உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி போன்ற பன்னாட்டு வங்கிகளின் கடன் உதவி கொடுக்கப்படுகிறது. கேரளாவின் கோழிக்கோடு நகருக்கு குடிநீர் வழங்கும் திட்டத்துக்கு கடன் வழங்கியது ஜப்பான் பன்னாட்டு ஒத்துழைப்பு வங்கி; அதன் காண்டிராக்டுகளை எடுத்து லாபம் சம்பாதிப்பது பன்னாட்டு நிறுவனங்கள். கடந்த தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டமும் ஜப்பானிய பன்னாட்டு ஒத்துழைப்பு வங்கியிடம் கடன் வாங்கியே செயல்படுத்தப்படுகிறது.

காங்கிரசின் மன்மோகன் சிங்கும், ப சிதம்பரமும் நாட்டை அடகு வைப்பவர்கள், தேச பக்த பா.ஜ.க. ஆட்சி வந்தால் அன்னிய ஆதிக்கம் தகர்க்கப்பட்டு வரும் என்று பிரச்சாரம் செய்யப்படுகிறது. ஆனால், தனது நாக்கின் ஒரு பிளவான குருமூர்த்தியை விட்டு சுதேசி பேசி வரும் ஆர்.எஸ்.எஸ் நச்சுப் பாம்புகள், இன்னொரு பிரிவான பாரதீய ஜனதாவை வைத்து தண்ணீர் தனியார்மயத்தை முன்னெடுத்துச் செல்கின்றன. கடந்த 5 ஆண்டுகள் பாரதீய ஜனதா ஆட்சி செய்து வரும் கருநாடகத்தின் பல்வேறு பகுதிளில் குடிநீர் வழங்கல் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மைசூர் மாநகராட்சியின் குடிநீர் வழங்கல் டாடாவின் ஜஸ்கோவிடம் (TATA owned JUSCO) ஒப்படைக்கப்பட்டுள்ளது. குல்பர்கா, ஹூப்ளி, பெல்காம் நகரங்கள் ஒவ்வொன்றிலும் 8 வார்டுகளில் குடிநீர் வழங்கல் வியோலியா என்கிற ப்ரெஞ்சு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தமது நகர எல்லைக்குட்பட்ட அனைத்து பகுதிகளுக்கு இதே திட்டத்தை விரிவுபடுத்துவதற்கான தீர்மானங்களை இந்த நகராட்சிகள் நிறைவேற்றியுள்ளன.
மங்களூர் மாநகராட்சியும், குண்டப்பூர், உடுப்பி, புத்தூர் நகராட்சிகளும் நீர் வினியோக கட்டமைப்பை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைப்பதற்கான டெண்டர் நடைமுறையை ஆரம்பித்திருக்கின்றன. இவற்றைத் தவிர வட கர்நாடகாவில் உள்ள 16 நகராட்சிகள் நீர் வினியோகத்தை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைத்திருக்கின்றன.

மாநில அரசு தீட்டியுள்ள ‘கன்னட கங்கா’ என்கிற திட்டத்தின்படி சித்ரதுர்கா மற்றும் பீஜப்பூர் மாவட்டங்களின் குடிநீர் வழங்கல் நீண்ட கால் ஒப்பந்தங்களின் கீழ் தனியார் நிறுவனங்களிடம் கையளிக்கப்பட உள்ளது.

வட கருநாடவின் இன்னும் 6 நகரங்களின் குடிநீர் திட்டங்களுக்காக உலக வங்கி அல்லது ஆசிய வளர்ச்சி வங்கியிடம் இருந்து கடன் பெறுவதற்கு கருநாடகா அரசு முயற்சித்து வருகிறது. இவை தவிர, ஏற்கனவே பெங்களூரு நகரத்தில் குடிநீருக்கான மீட்டர்கள் பொருத்தப்பட்டு நீர் நுகர்வின் அளவுகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. நுகர்வின் அடிப்படையில் விலை வைக்கும் முறையும் பெங்களூரின் சில பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதே போல், தில்லி மாநகராட்சியின் ‘ஜல் போர்ட்’, முன்னோட்டமாக மூன்று பகுதிகளில் குடிநீர் வழங்கலில் அரசு – தனியார் கூட்டுத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது.

ஏற்கனவே இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்ட தனியார் அரசு கூட்டுத் திட்டங்களின் அனுபவங்கள் கேவலமாக பல்லிளிக்கின்றன. “மகாராஷ்டிராவின் நாக்பூரில் மாநகராட்சியின் சார்பில் குடிநீர் வினியோகம் செய்து வந்த போது குழாய்கள் ஒழுகியதால் 45% நீர் வீணாவதாகவும், இதனை முறைப்படுத்த மாநகராட்சியிடம் போதுமான நிதி இல்லை என்றும் காரணம் காட்டி, தனியாரிடம் குடிநீர் வழங்கல் துறை ஒப்படைக்கப்பட்டது. ஆனால், தனியாரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்பும் 30% நீர் வீணடிக்கப்பட்டு வருவதற்கு என்ன காரணம் என்று யாரும் பேசுவதில்லை” என்று தில்லியில் கடந்த மார்ச் 17 அன்று நடந்த தண்ணீர் தனியார்மயத்துக்கு எதிரான கருத்தரங்கில் நாக்பூர் மாநகராட்சி தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த ஜம்மு ஆனந்த் தெரிவித்துள்ளார்.

மேலும் அதே கருத்தரங்கில் பேசிய ஹிமான்ஷு தக்கார், “இந்தியாவில் தண்ணீர் ஒழுங்கு முறை ஆணையம் ஏற்படுத்தியுள்ள ஒரே மாநிலமான மகாராஷ்டிராவில் அது பெரும் தோல்வியை சந்தித்துள்ளது” என்று தெரிவிதார். சுதந்திர இந்தியாவில் தண்ணீரில் நடந்த ஊழல்களிலேயே பெரிய ஊழல் மகாராஷ்டிராவின் அரசு – தனியார் கூட்டுத் திட்டத்தில் தான் நடந்துள்ளது. கடந்த பத்தாண்டுகளில் பாசன வசதி ஏற்படுத்திக் கொடுப்பதற்காக ரூ 75 ஆயிரம் கோடி செலவானதாக அரசு கணக்குக் காட்டுகிறது. ஆனால் உண்மையில் ஒரு ஹெக்டேர் அளவுக்குக் கூட பாசன வசதி ஏதும் செய்து தரப்படவில்லை.

பச்சையாக “கைல காசு வாய்ல தோசை” என்பது போல் தண்ணீரை வியாபார சரக்காக்குவதில் உள்ள சிக்கல்களை ஆளும் கும்பல் மிக நன்றாக உணர்ந்துள்ளது. ஏற்கனவே உலக அளவிலான அனுபவங்களில் இருந்து படிப்பினைகளையும் கற்றுள்ளது. எனவே நீர்மேலாண்மை, நீர் ஒழுங்குமுறை ஆணையம், தனியார் – அரசு கூட்டுத் திட்டம் என்று பல்வேறு பசப்பல் வார்த்தைகளின் பின்னே ஒளிந்து கொண்டு தண்ணீர் தனியார்மயத்தை முன்னெடுத்து வருகிறது.

“அரசுத் துறை என்றாலே அதன் தரம் மோசமாக இருக்கும், நீர் வழங்கல் மட்டுமின்றி வேறு எந்தத் துறையானாலும் அரசால் உருப்படியான சேவை எதையும் அளிக்க முடியாது. தனியார் சேவை என்றால் அதில் ஒரு கார்ப்பரேட் ‘தரம்’ இருக்கும்” என்றும் தனியார்மயதாசர்கள் பிரச்சாரம் செய்கிறாரகள்.

இதன் முதல்கட்டமாக தண்ணீர் என்பது உரிமை என்பதாக இருக்கும் மக்களின் கருத்தை மாற்றியமைக்க வேண்டியுள்ளது. எனவே, முதலில் தண்ணீருக்கான உள்கட்டமைப்பு வசதிகளை புறக்கணித்து செய்ற்கையான தண்ணீர் பஞசத்தை ஏற்படுத்துவது, தொடர்ந்து தண்ணீரை அரசே விற்கும் சரக்காக்குவது, பின்னர் தனியாரைக் கூட்டுச் சேர்ப்பது என்கிற பெயரில் ஒட்டகத்தை கூடாரத்துக்குள் நுழையவிடுவது என்கிற உத்தியைக் கையாள்கிறது ஆளும் வர்க்கம். இதற்காக மக்களை பல்வேறு வழிகளில் பயிற்றுவிக்கும் எட்டப்பன் வேலையை என்.ஜி.ஓக்களும் ஆளும் வர்க்க ஊடகங்களும் பரவலாக செய்து வருகின்றன.
Related Posts Plugin for WordPress, Blogger...